வேலூர் கோட்டையை தி.மு.க. வசமாக்கிய வாக்காளர்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.கடந்த 5-ம் தேதி வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளும் பெற்றனர். முடிவில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வேலூர் கோட்டையை தி.மு.க. வசமாக்கிய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி. தாமதப்படுத்த முயற்சிக்கலாம் தடுக்க முடியாது என்பது போல் தி.மு.க.வின் வெற்றி உள்ளது. இந்தியா எதிர்பார்த்த வேலூர் தொகுதியின் முடிவு தி.மு.க.விற்கு சாதகமாகியுள்ளது.
வாக்காளர்களின் ஆதரவால் ஆளுங்கட்சியின் அதிகார பலத்தை மீறி வேலூர் தி.மு.க.வின் கோட்டையாகியுள்ளது. ஜனநாயக வழியில் திராவிட இயக்க லட்சியங்களை வென்றெடுக்கும் பணியில் முன்னேறிச் செல்வோம்.
மிட்டாய் கொடுத்து பெற்ற வெற்றி என்ற அ.தி.மு.க.வின் பிரசாரத்தை மக்கள் நிராகரித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.