25 ஆண்டுகளாக சிறையில் தவிக்கிறேன்- நளினி

303 0

201610231111582936_nalini-petition-back-to-national-commission-for-women_secvpfவேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மீண்டும் தேசிய பெண்கள் ஆணையத்துக்கு சிறை கண்காணிப்பாளர் மூலம் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று, நளினியை அவரது வக்கீல் புகழேந்தி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற மனு மீதான விசாரணை அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையில் நளினி, தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணையத்துக்கு மனு அளித்திருந்தார்.

அந்த மனு மீதான முடிவு இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில் மீண்டும் தேசிய பெண்கள் ஆணையத்துக்கு நளினி சிறை கண்காணிப்பாளர் மூலம் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், இந்தியாவிலேயே 25 ஆண்டுகள் சிறையில் இருந்த பெண் சிறைவாசி நான் தான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்ற மாநிலங்களில் 10 அல்லது 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பெண் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளாக சாதாரண பெண்ணாக குடும்ப வாழ்க்கை வாழவில்லை. எனது மகள் லண்டனில் வசிக்கிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். எனவே, தேசிய பெண்கள் ஆணையம் இந்திய அரசியலமைப்பு சட்டம் 72-ஐ பயன்படுத்தி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.