ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியை உருவாக்க வேண்டும் என அக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியொன்று உருவாகுவதற்கு தான் நூறு வீதத்திற்கு மேல் இணங்குவதாகத் தெரிவித்துள்ள சஜித், ஆனாலும், கட்சியின் வேட்பாளரை நியமித்த பின்னரே கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டுமென்று அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டணியை உருவாக்க, பிரதமரும், சஜித்தும் இணங்கியுள்ளார்கள் என இன்று வெளியாகிய செய்திகளையடுத்து அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையிலேயே சஜித் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்பாளராக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
அத்துடன், வேட்பாளர் என்ற எதிர்பார்ப்புடன் சஜித்தும் தனது நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும்நிலையில், எதிர்க் கட்சிகள் அரசாங்க நிதியை சஜித் செலவிட்டு வருவதாக குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், தொடர்ந்தும் வேட்பாளர்கள் தொடர்பாக பிரதான கட்சிகளுக்குள் இழுபறிநிலை தொடர்கின்றது. இதனிடையே ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசவுடன் சந்திப்பை மேற்கொண்டதாகவும், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் களமிறங்க அவர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் கூட்டணி உருவாக்கத்திற்கு பிரதமர் ரணிலுக்கும், சஜித்துக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.