சர்வதேச சக்திகளுடன் ஒன்றிணைந்து 2015ஆம் ஆண்டு என்னை தோல்வியடையச் செய்த தற்போதைய அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம் பெற்ற தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றை நடத்துவதற்கான கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொரட்டுவை மாநகர சபையின் புதிய கட்டட தொகுதியை புதன்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் சுயாதீனமான விசாரணை வேண்டும் என்று பேராயர் வேண்டுகோள் விடுக்கின்றார்.
அதனை ஏற்றுக்கொண்டு சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்படவேண்டும் என்பதுடன் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.
பொது எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து கோரிக்கை விட தீர்மானித்துள்ளனர்.
அதேபோன்று தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படவேண்டும். நாட்டில் 30 ஆண்டு கால யுத்தத்தை நிறைவு செய்து அபிவிருத்தியை முன்னெடுத்தோம்.
ஆனால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கையளித்ததாக தற்போதைய ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். தற்போதைய ஆட்சி தொடர்பாக மத்திய வங்கி அறிக்கையினை கவனத்தில் கொண்டால் உண்மை வெளிப்படும்.
நாட்டு மக்களால் வாழ முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேசுகின்றனர்.
நல்லாட்சியில் சிறந்ததோர் ஜனநாயகத்தை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் மாகாணசபைத் தேர்தலை நடத்தாதுள்ளனர். உள்ளூராட்சிமன்ற தேர்தலை பெற்றுக்கொள்வதற்காக இரண்டரை வருட காலம் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த தேர்தல் முடிவுகளைக் கண்டு தேர்தல்களை ஒத்திவைக்கவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. எமது ஆட்சி காலத்தில் எவ்விதமான அச்சமும் இன்றி தேர்தல்களை நடத்தினோம். போரின் பின்னர் நாட்டின் பொருளதாரத்தை மேம்படுத்தினோம்.
2015 ஆம் ஆண்டு போலி பிரசாரங்களை முன்னெடுத்து சர்வதேசம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து எம்மை தோல்வியடையச் செய்தனர்.
இதனை தற்போது மக்கள் உணர்ந்துள்ளனர். தற்போதைய அரசாங்கம் நாட்டுக்காக ஒன்றும் செய்ததில்லை. கல்வி, சுகாதாரம் என அனைத்தும் வீழ்ச்சி கண்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் போர் வெடித்துள்ளது. நாடு பூராகவும் சுவரொட்டிகளை ஒட்டுகின்றனர். பத்திரிகைகளில் விளம்பரங்களைச் செய்கின்றனர். இவை அனைத்தும் மக்கள் நிதியாகும். ஆகவே மாற்றம் ஒன்று அவசியமாகும். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அச்சமின்றி வாழக்கூடிய சூழல் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கர்களுக்கு தேவாலயங்களுக்கு செல்ல முடியவில்லை. பௌத்தர்களுக்கு விகாரைகளுக்கு செல்ல முடியவில்லை. இந்து மக்களுக்கு கோவில்களுக்கு செல்ல முடியவில்லை. இஸ்லாம் மக்களுக்கு பள்ளிவாசல்களுக்கு செல்ல முடிய வில்லை. ஆகவே அச்சமற்ற ஒரு சூழல் நாட்டில் மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.