நல்லூர் திருவிழா சோதனை நடவடிக்கைகளை நிறுத்த முடிவு

438 0

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ காலத்தில் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக விமா்சனங்கள் எழுந்துவரும் நிலையில், சோதனை நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாதுகாப்பை உறுதிப்படுத்த ஸ்கானர் (metal detector) இயந்திரங்களைப் பொருத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வடக்கு ஆளுநரின் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது  கூறுகையில், “பாதுகாப்பு ஒழுங்குகள் எப்போதும் மக்களுடைய சுதந்திரத்தை பறிப்பதாகவே அமையும். இந்நிலையில் நல்லுார் கந்தசுவாமி ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பும் அவ்வாறானதே. இதனை மக்களும் ஆலய நிர்வாகமும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

எனவே வடக்கு மாகாண சபை ஊடாக 4 ஸ்கானர் இயந்திரங்களை குத்தகைக்குப் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளோம். இதனூடாக பக்தர்களை நிறுத்தி சோதனை செய்யவேண்டிய தேவையில்லை.

ஸ்கானர் இயந்திரம் (வெடிபொருட்கள், உலோக பொருட்களை கண்டறியும் கருவி) ஊடாக மக்களை அனுப்பினால் போதுமானதாக இருக்கும்.

இதற்கடையில் வேறு சிலரும் இவ்வாறு இயந்திரத்தைப் பொருத்த முயற்சிப்பதாக அறிகின்றோம். அது நல்ல விடயம். எவ்வளவு தேவையோ அதனை நாங்களும் பெற்றுக் கொடுக்கலாம்” என்று குறிப்பிட்டார்.