வடக்கில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில்-சுரேன் ராகவன்

467 0

வடக்கு மாகாணத்தில் தாய், தந்தையரை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக புலமைப் பரிசில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கூறியுள்ளார்.

வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்த பிள்ளைகளுடைய கல்வி மேம்பாட்டுக்காக புலமைப் பரிசில் திட்டமொன்றை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 5 மாவட்டங்களிலும் தாய், தந்தையை இழந்த பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு மாவட்ட மட்டத்தில் அந்த திட்டம் செயற்படுத்தப்படும்.

அதேபோல் விசேட தேவையுடையோர் மற்றும் பாடசாலை மாணவிகளுக்காக விசேட பேருந்து ஒன்றை யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆசனங்கள் இல்லாமல், சக்கர நாற்காலியுடன் ஒருவர் அப்படியே பேருந்துக்குள் ஏறி பாதுகாப்பாக பயணிக்கக் கூடிய வகையில் பேருந்து அமைந்திருக்கும். இந்த பேருந்து சேவையும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும்” என ஆளுநர் கூறினார்.