யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் பூதவுடலுக்கு இன்று காலை முதல் மாணவர்கள், பிரதேச மக்கள், மதகுருமார்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்று வந்த அளவெட்டி கந்தரோடையைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் நடராசா கஜன் ஆகியோரின் சடலங்கள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவரதும் சடலங்கள் அவரவர் வீடுகளில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
நடராசா கஜனின் பூதவுடல் அவரது சொந்த இடமான கிளிநொச்சியிலுள்ள 155 ஆம் கட்டையில் வைக்கப்பட்டுள்ளது.
கஜனின் பூதவுடலுக்கு இன்று அதிகாலை முதல் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், மாணவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உட்பட பொதுமக்கள் பலர் இன்றைய தினம் அஞ்சலி செலுத்தினர்.