பல்கலை மாணவர்கள் கொலை-பொலிஸாருக்கு விளக்கமறியல்(காணொளி)

460 0

jaffna-policeயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலையுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 பொலிசாரும் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி வரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸார் இன்று காலை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது குறித்த 5 பொலிசாரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டையடுத்து பல்கலைக்கழக மாணவர்களாகிய அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பவுண்ராசா சுலக்சன் மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நடராசா கஜன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு காரணமாக இவர்களில் பவுண்ராசா சுலக்சன் இறந்துள்ளதாக அவரது பெற்றோருக்கு சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கஜனின் தலை வெடித்து பிரிந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் இரவு பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் குளப்பிட்டிச் சந்தியில் விபத்தில் இறந்ததாக முதலில் தகவல்கள் வெளியிடப்பட்டன.

இதன் பின்னர் எழுந்த சந்தேகத்தின்பின் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் மூலமே துப்பாக்கிச் சூட்டில் பவுண்ராசா சுலக்சன் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு  இரண்டு மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவர்களில் சுலக்சனில் இறுதிக்கிரியைகள் அளவெட்டி கந்தரோடையிலு அவரது வீட்டில் நாளைமறுதினம் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கலகம் அடக்கும் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் நகரைச் சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட 5 பொலிசாரும் அநுராதபுர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ் குடாநாட்டில் குழப்பநிலை எதுவும் நிலவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.