நாட்டில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டமே யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மாணவர்களைக் கொலை செய்யக்காரணமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்,
இலங்கை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் உயிரிழந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும். நாட்டில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமே பொலீஸாரின் இந்த அத்துமீறலுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
இந்தச் சட்டம் இலங்கை பொலீஸாருக்கு அதீத அதிகாரங்களை வழங்கியுள்ளது. இதன் விளைவே யாழ் பல்கலைகழகத்தின் இந்த இரண்டு மாணவர்களின் உயிரிழப்பு. இந்தச் சட்டம் நீக்கப்படவேண்டும்.
அதனால் பல தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பலர் இன்னும் சிறைச்சாலைகளுக்குள் உள்ளனர். எந்த ஆட்சி வந்தாலும் இந்தச் சட்டத்தை வைத்து தமிழ் மக்களை ஒடுக்கின்ற நிலைமையே தொடர்கிறது. பொலீஸார் இந்தச் சட்டத்தின் மூலம் பொலீஸார் தாங்கள் நினைத்தப்படி தங்கள் துப்பாக்கியை நீட்ட முடியும் என்ற நிலைமையை மாற்ற வேண்டும்.
இந்த துயரச் சம்வத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சரியான நீதி விரைவாக கிடைக்கவேண்டும்.இனிமேலும் இப்படியொரு சம்பவம் இடம்பெறாது இருக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பேசுக்கொள்கின்றது. ஆனால் அதற்கு மாறாக செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் எக்காலத்திலும் நல்லிணக்கம் மீது நம்பிக்கை ஏற்பாடாது.
நல்லாட்சி அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்து நியாயம் கிடைக்கும் என்று இருந்த நிலையில் இந்தச் சம்பவம் அதற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிளிநொச்சி மாவட்ட மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏழ்மையாக குடும்பத்தில் இருந்து பெரும் நம்பிக்கையோடு பல்கலைகழகம் சென்று தனது மூன்றாவது ஆண்டு கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் இப்படியொரு சம்பவம் வேதனைக்குரியது என்று மேலும் தெரிவித்தார்.