மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சாரதிகளிடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை அபராதமாக பெற்றுக்கொள்ளப்பட்டதாக போக்குவரத்துக்கட்டுப்பாடு மற்றும் வீதிப்பாதுகாப்பு பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஜூலை மாதம் 5 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 5 ஆம் திகதி வரையான ஒரு மாதகால பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிரான விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் போது கடந்த ஒரு மாத காலத்தில் போதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 7318 சாரதிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த கைது நடவடிக்கைகளின் போது கொழும்பு பிரதேசத்திலேயே அதிகளவான சாரதிகள் மதுப்போதையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சாரதிகள் அனைவரும் நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன்,சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
போக்குவரத்துக்கட்டுப்பாடு மற்றும் வீதிப்பாதுகாப்பு பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் அத்தியட்சர் இந்திக்க ஹப்புகொட வின் கண்காணிப்பின் கீழேயே இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.