பாடப் புத்தகங்களில் எங்களுடைய வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு அல்லது மழுங்கடிக்கப்பட்டு வருகிறது- புதுக்குடியிருப்புப் பிர தேச செயலர்

352 0

pratheepannபாடப் புத்தகங்களில் எங்களுடைய வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு அல்லது மழுங்கடிக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்புப் பிர தேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.அத்துடன், எங்களுடைய இளைய தலைமுறையினர் கலை இலக்கிய வரலாறுகளைத் தேடிப் பெற்றுக் கொள்வதன் மூலம் எங்களு டைய சமூகத்தில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
யாழ்.கோப்பாய பிரதேசத்தில் இலக்கியம் வளர்த்து மறைந்தோரை நினைவில் நிறுத்தும் பொருட்டு யாழ்ப்பாணத்தின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான சி.யோகேஸ்வரி எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது.கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

.அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது எங்களுடைய சமூகத்தில் தற்போது வாசிப்புப் பழக்கம் குறைவடைந்து செல்வதற்கு இலத்திரனியல் உபகரணங்களும் ஒரு காரணமாக அமைகின்றன.

இன்றைய இளைய சமுதாயத்தினர் தங்களுடைய கலை, இலக்கிய இரசனைகளை முழுமையாக நிறுத்தி விட்டார்களோ என்றோ, அவர்கள் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை என்றோ நாங்கள் கூறிவிட முடியாது.

ஏனெனில், இன்றைய இளைஞர்கள் தங்களுடைய இலக்கிய இரசனைகளை நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மூலமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். இருந்தாலும் எழுத்துருவாக்கம் பெறுகின்ற நூல்களை இளைஞர்கள் வாசிப்பது மிகவும் குறைவாகவேயுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் நூலாசிரியர்கள் ஒரு நூலை வெளியீடு செய்வது என்பதே மிகவும் கடினமானது. அத்தகையதொரு சூழலில் மூன்று நூல்களை சுகப்பிரசவங்களாக மூத்த எழுத்தாளர் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் எங்களுடைய மண்ணிற்கு வழங்கியிருக்கிறார்.
தனியொருவராக நின்று இந்தப் பிரதேசத்தில் கலைகளை வளர்த்து மறைந்த பெரு மகான்கள் மற்றும் கலைஞர்களின் விபரங்களை வெளியிட்டிருப்பது உண்மையில் பெருமைக்குரிய, சாதனைக்குரிய விடயமாகும்.

அந்த வகையில் அவருடைய தமிழ்ப் பணியையும், வெளியீட்டுப் பணியையும் மனதார வாழ்த்துகின்றேன். நூலாசிரியர் கோப்பாய் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராக அல்லாத போதும் கோப்பாய் பிரதேசத்தின் இலக்கிய விற்பன்னர்கள் தொடர்பாகவும், இலக்கியம் தொடர்பாகவும் மிகவும் நுணுக்கமான அறிவை அவர் கொண்டிருக்கிறார்.

அவர் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து இதுவரை பத்து வரையான நூல்களை வெளியீடு செய்திருப்பது கோப்பாய் பிரதேசத்திற்கே பெருமை சேர்க்கும் விடயமாகும்.அவர் தனது நூலில் சி.வை.தாமோதரம்பிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர், மூதறிஞர் சொக்கன் உட்பட கோப்பாய் பிரதேசத்தின் 55 எழுத்தாளர்கள் தொடர்பாகவும் விபரித்திருக்கிறார்.

நல்லதொரு சமூக இலக்கியமாக இந்த மூன்று நூல்களும் வெளிவந்துள்ளன. அவருடைய இலக்கியப் பணி தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.