அட்டாளைச்சேனை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் “ஹவசிமா“ இயந்திரம் ஜனாதிபதியால் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார்.
ஜப்பானில் பாரிய அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் பாரிய ”ஹவசிமா” இயந்திரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில் குப்பைகள் அன்றாடம் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவாக இப்பகுதிகளில் கொட்டப்பட்டு வருகின்றன.இதற்காக புதிய குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் பாரிய “ஹவசிமா“ இயந்திரம் ஒன்று இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ள இவ்வியந்திரத்தை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைக்கவுள்ளார்.
இதனால் கொட்டப்படும் குப்பை கூழங்களை தரம்பிரித்து விரைவாக மீள்சுழற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் குப்பைகளை உண்ண வரும் யானைகளை இதன் மூலம் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வாய்ப்பு ஏற்படுகிறது.
அஸ்ரப் நகர் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றன.இதற்கு காரணம் அதிகளவான குப்பைகள் இப்பகுதிகளில் தேங்குவதாகும்.
தினமும் காரைதீவு கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் உள்ளிட்ட பிரதேசங்களில் இப்பகுதிக்கு குப்பைகள் அந்நத அந்த மாநகர மற்றும் பிரதேச சபையின் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுகின்ற இவ்வாறான குப்பைகள் தினமும் மீள் சுழற்சிக்கு உட்படுகின்ற போது யானைகளின் வரவு குறைவதுடன் மக்களிற்கான பாதுகாப்பும் உறுதிப் படுத்தப்படுகின்றது. அத்துடன் பலருக்கும் இவ்வியந்திரத்தினால் தொழில் வாய்ப்பும் உள்ளது.
இவ்வியந்திரம் இயங்க ஆரம்பமாகின்ற போது மலைபோல் குவிந்துள்ள குறித்த குப்பைகள் மிக விரைவாக குறைய வாய்ப்பு ஏற்படும். அத்துடன் யானைகளை கட்டுப்படுத்தவும் முதற்கட்ட நடவடிக்கை எதிர்வரும் சில நாட்களில் முன்னெடுக்க உள்ளோம். இது தவிர மேலும் சபையின் திண்மக்கழிவகற்றல் முகாமுத்துவத்தை மேம்படுத்துவதற்கான பொறிமுறைத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிப்பதாக தெரிவித்தார்.
அம்பாறை பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகள் அநேகமானவை மேற்குறித்த இடத்திற்கே கொட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.