மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதலாவது நினைவு தினமான நாளை திமுக சார்பில் மவுன ஊர்வலம் நடைபெறுகிறது.மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாவது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இந்த அமைதி ஊர்வலத்தில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். ஊர்வல நிறைவில், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
நாளை மாலை 5 மணிக்கு, முரசொலி அலுவலக வளாகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.
சிலையை, மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். இதில், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். முரசொலி செல்வம் வரவேற்கிறார்.
மாலை 5.30 மணியளவில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
விழாவின் நிறைவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றியுரையாற்றுகிறார். “கருணாநிதி நினைவு தின பேரணி, சிலை திறப்பு விழா ஆகியவற்றில் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்” என்று தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.