ரஜினியுடன் கூட்டணி சேர விருப்பம்- கமல்ஹாசன்

342 0

மக்கள் விரும்புவதால் ரஜினியுடன் கூட்டணி சேர விரும்புவதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் கமல் பேசும் கருத்துகள் அரசியல் தொடர்பானதாகவும் இருப்பதால் பரபரப்பு ஏற்படுகிறது.

கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பிரபலங்களாக மாறி கமலை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் ரஜினியுடன் கூட்டணி தொடர்பாக கமல் கூறிய கருத்துகள் ஒளிபரப்பாகவில்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது முகநூல் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார்.

முரளி அப்பாஸ் தனது பதிவில் கூறியிருப்பதாவது: ‘எல்லார் கேட்ட கேள்வியும் வந்து விட்டது, ஆனால் முக்கியமான கேள்வியை விஜய் டிவிகாரர்கள் ஏன் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. சேரன் ரஜினியாக மாறி கேட்ட கேள்விக்கும், கமல் சார் சொன்ன பதிலுக்கும் கை தட்டிய ரசிகனாக எனக்கு அது புரியவே இல்லை.

சேரன் கமல்ஹாசனிடம் கேட்டது இதுதான்… வணக்கம் கமல் , நல்லா இருக்கீங்களா? எனக்கு சில அரசியல் கேள்விகள் உங்ககிட்ட இருக்கு. நானும் நீங்களும் ஒரு 40 வரு‌ஷம் நடிகர்களாக பயணம் பண்ணிட்டோம். நாம நடிகர்களாக இருந்தபோது மக்கள் நம்ம கிட்ட என்ன கேட்டார்களோ அத முடிந்த வரைக்கும் சிறப்பா கொடுத்துருக்கோம்.

இப்போது நானும் அரசியலில் குதிக்க நினைத்துக்கொண்டு இருக்கிறேன், நீங்க குதிச்சிட்டீங்க… நடிகர்களாக இருந்து அவர்களை திருப்திபடுத்திய நாம், அரசியல் தலைவர்களாக மாறி, அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் திருப்தி அடைகிற மாதிரி வேலை செய்ய முடியுமா?

இதற்கு கமல்ஹசன் கூறிய பதில் வருமாறு:-

‘அவர்கள் எதிர் பார்ப்பதில் ஒன்று, இப்படி நானும் நீங்களும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது தான். முடியுமான்னு கேட்டீங்கன்னா, முனைந்தால் முடியும். அதற்கு, நான் என்பது நாமானால் கண்டிப்பாக முடியும். இது இந்த ரஜினி(சேரன்) வந்தாலும் சொல்லுவேன், அந்த ரஜினி வந்தாலும் சொல்லுவேன்’ என்றார்.
ரஜினிகாந்த்

கோமாளி டிரெய்லர் பார்த்துவிட்டு கமல் ரஜினிகாந்த்துக்கு ஆதரவு தெரிவித்ததை ஆங்கில சேனல்களே செய்தியாக போடும் போது இதை எதுக்காக எடிட் பண்ணனும். இதில் அரசியல் தெரியவில்லை. நட்பும், அதன் மரியாதையும் தான் தெரியுது.

இலங்கை வி‌ஷயத்துல தர்‌ஷன் கேட்ட கேள்வியும் தப்பாக எதுவுமே இல்லையே. தர்‌ஷன் கேட்ட கேள்வி: ‘இந்த அசல் உலகநாயகன் கிட்ட இந்த போலி உலகநாயகன் கேக்குற கேள்வி… ஈழத்தில் இருக்குற தமிழர்கள் எல்லாம் கமல் சாரை தங்களில் ஒருவராகத்தான் பார்ப்பார்கள், அதுக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.

கமல் சாருடைய அதீத நடிப்பு, விடா முயற்சி, விஸ்வரூபம் இப்படினு சொல்லிட்டு போகலாம். ஆனால் முக்கியமாக பார்க்கிற வி‌ஷயம் என்னென்னா சினிமாவில் ஈழத்து மக்களுடைய பிரச்சனையை முதன்முதல்ல தைரியமா தெனாலி மூலம் இந்த உலகத்துக்கு எடுத்து காட்டின ஆள் நீங்கதான். இப்போ நீங்கள் மக்களின் தலைவரா இருக்கீங்க, இந்த சமயத்துல அந்த மக்களுக்கு சொல்லவேண்டிய ஒரு அறிவுரை அல்லது ஒரு செய்தி என்ன? இவ்வாறு தர்‌ஷன் கேட்டார்.

‘தெய்வம் நின்று கொல்லும் அரசன் அன்று கொல்வான்னு சொல்லுவாங்க. அன்று கொல்வது அரசனின் வேலை இல்ல, அது ஒரு மிக மோசமான முன் உதாரணம். அரசுக்கு மோசமான முன் உதாரணம். உங்களுக்கு முன்பு இருந்த அரசு. அதை நீ ஏன் சொல்லி காட்டல அப்படினா, அப்போ நாங்க அரசு இல்ல, தெனாலி. கோமாளிதனமா நின்னு இந்த பக்கத்தையும் அந்த பக்கத்தையும் பார்த்து கிட்டு இருந்தோம்.

ஏதாவது உதவி போய் சேரும் அப்பிடின்னு நம்பிக்கிட்டு இருந்தோம். இப்படி போனா தேச விரோதம், அப்படி போனா தமிழனுக்கு துரோகம். என்ன பண்றதுனே தெரியாம முழிச்சிகிட்டு இருந்த நேரம் அது. இது நான் வந்து நேர்மையாக சொல்லும் வி‌ஷயம்.

நல்ல அரசு இருந்திருந்தால் இந்த கதி நேர்ந்துருக்காது என்று நம்பும் ஒரு சிலரில் நானும் ஒருவன். நான் சொல்வது இரண்டு நாடுகளிலும். இது உலக தமிழனின் குரல், சென்னை தமிழனின் குரல் அல்ல. இது இந்த அரங்கத்தையும் தாண்டி வெளியே செல்ல வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

ஆனால் கம்பெனிக்கு என்று சில சட்ட திட்டங்கள் இருக்கலாம், பயம் இருக்கலாம். வியாபார பயங்கள் இருக்கலாம், அதையும் கடந்து அவர்கள் எங்கே தன்னை வாழவைத்து கொண்டு இருக்கிறார்களோ அந்த மக்களுக்காகவாவது இதை அங்கே கடத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை’.

இவ்வாறு கமல் பதில் அளித்தார். இதை ஏன் தொலைக்காட்சி நீக்கியது என்று புரியவில்லை.

முரளி அப்பாஸ் தனது பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.