காஷ்மீர் பிரச்சினையில் பாஜக மிகப்பெரிய பிழை செய்து விட்டது என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குளம், கண்மாய் தூர்வாரும் பணியை கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் 22 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இப்பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து செய்யப்படும். காஷ்மீர் பிரச்சினையில் பிரதமர் மோடி மிகப்பெரிய தவறை செய்து வருகிறார். காஷ்மீரில் உள்ள முஸ்லீம் மக்கள் இந்தியாவுடன் தான் சேருவோம் என இன்றளவும் கூறி வருகின்றனர்.
தற்போது அங்கு முன்னாள் முதல்வர்களை கைது செய்து வருவது சரியான தீர்வாக இருக்காது. இதனால் அங்கு மேலும் பதட்டமே ஏற்படும்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும் அது இறுதியான முடிவாக இருக்காது. சுதந்திர போராட்டத்தின் போது மிகச்சிறப்பாக செயல்பட்ட மகாத்மா காந்தியே எந்த பதவியிலும் இல்லை. எனவே பதவியில் இல்லாவிட்டாலும் சிறப்பாக பணியை கட்சிக்கு ராகுல் காந்தியால் செய்ய முடியும்.
நாடு சுதந்திரம் அடைந்த போது ஜவஹர்லால்நேரு மற்றும் உயர்மட்ட தலைவர்களின் சமாதானத்தில்தான் அன்றைக்கும் காஷ்மீர் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலத்தை உருவாக்கினார்கள். அதனை மாற்ற முயன்றால் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது.
நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தேசிய நதிகளையும், அணைகளையும் இணைப்பது ஒன்றே தீர்வாக அமையும்.
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் பிரசாரம் செய்து முடித்துள்ளேன். அங்கு தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த் நிச்சயம் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.