இன்று ஐக்கிய தேசிய கட்சி ஒரு கூட்டணியை அமைத்து அதனுடைய ஜனாதிபதி வேட்பாளரை வெளியிடுவதாக இருந்தது. ஆனால் இது எதிர்பாராத விதமாக இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கட்சிக்குள் இருக்கின்ற உட்பூசலும், அதேபோல கட்சியினுடைய ஒற்றுமை இல்லாததன் காரணமாக இது இப்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொட்டகலையில் இன்று மலையக மக்கள் முன்னணி கட்சி காரியாலயத்தில் வைத்து அக்கரப்பத்தனை நகர ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சுவாமி சிலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அதேபோல் இந்த அரசாங்கத்திலும் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது.
ஆகவே அரசாங்கத்திற்குள்ளேயும், கட்சிகளுக்குள்ளேயும் பல குழப்பங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நாட்டினுடைய எதிர்காலம் எவ்வாறு அமையும் என யாருக்கும் ஒரு கேள்விக்குரியாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த குழப்பங்களை நிவர்த்திக்கு முகமாக முதலாவதாக கட்சிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி, அதன்பிறகு பங்காளி கட்சிகளையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்தினுடைய ஸ்தீரதன்மையை உறுதிப்படுத்தி இந்த நாட்டினுடைய எதிர்காலத்தை கொண்டு செல்ல வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.