அருவக்காலு பிரதேசத்தில் மற்றுமொரு மீத்தொட்டமுல்ல வேண்டாம்

266 0

புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டி, அதனை மற்றுமொரு மீத்தொட்டமுல்ல போன்று மாற்ற வேண்டாம் என்று கோரிக்கை விடுத்த சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், இப்பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவானதொரு தீர்வினைப் பெற்றுத்தராவிட்டால் அரசிற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புத்தளம் அருவக்காலுவில் குப்பைகளைக் கொட்டி அதனை மற்றுமொரு மீத்தொட்டமுல்ல போன்று மாற்ற வேண்டாமென வலியுறுத்தி இன்று மருதானை சமய, சமூக நடுநிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர்.

அச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பைச் சேர்ந்த லஹிரு வீரசேகர கூறியதாவது:

கொழும்பிலிருந்து கொண்டுசெல்லப்படும் குப்பைகளை புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் கொட்டுவதற்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவகவின் பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக அப்பிரதேச மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

நாட்டில் நெடுங்காலமாகவே குப்பைகளை அகற்றுவது தொடர்பான பிரச்சினை இருந்து வருகின்ற போதிலும், மீத்தொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து பாரிய அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் இவ்விடயம் குறித்து பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது மீண்டும் 2020 இல் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விடயமே பிரபலமாகப் பேசப்படுகிறது. இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக யார் களமிறங்கினாலும் தொடர்ந்துவரும் இந்தக் கழிவுகளை அகற்றுவது குறித்த பிரச்சினைக்கு யாரால் தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்று நாங்கள் கேட்கின்றோம் என அவர் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார்.