ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எவரும் பொதுஜன பெரமுனவிற்கு ஒரு சவால் அல்ல. 2015ம் ஆண்டு நாட்டு மக்களுக்கு வழங்கிய போலியான வாக்குறுதிகளில் இரண்டாம் பாகத்தை தற்போது ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் தேர்தல் பிரச்சாரமாக்கி வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாட்டு மக்களிடம் குறிப்பாக இளைய தலைமுறையினரை இலக்கு வைத்து ஐக்கிய தேசிய கட்சி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. இலவச அருகலை ,10 இலட்சம் தொழில்வாய்ப்புக்கள், சிறிய ரக வாகன கொள்வனவு, உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. தற்போது உடற்பயிற்சி உபகரணங்கள்(ஜிம்) வழங்குவதாக குறிப்பிட்டுள்ளவை உட்பட வாக்குறுதிகளின் ஊடாகவே ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தது.
கடந்த நான்கு வருட காலமாக வழங்கிய எவ்வித வாக்குறுதிகளும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. மாறாக நடைமுறையில் இருந்த விடயங்களே அரசியல் தேவைகளுக்காக மாற்றியமைக்கப்பட்டன.
தற்போது போலியான வாக்குறுதிகளின் இரண்டாம் பாகத்தை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை இலக்காக கொண்டு ஆரம்பித்து விட்டது என அவர் தெரிவித்தார்.