பிரான்ஸ் அரசை கண்டித்து ஐந்தாவது நாளாக போலீசார் போராட்டம்

437 0

201610221038215036_french-police-protest_secvpfஅதிகரித்துவரும் தீவிரவாத தாக்குதல்களால் தங்களது உயிருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அரசை கண்டித்து பிரான்ஸ் நாட்டு போலீசார் தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் 230-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் போலீஸ் ரோந்து வாகனத்தின்மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மர்மநபர்கள், தீபற்றி எரிந்த வாகனத்தின் உள்ளே இருந்த போலீசாரை வெளியே வரவிடாமல் தடுத்தனர். இச்சம்பவத்தில் இரு போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், குற்றங்களை தடுப்பதற்காக கடமையாற்றும் போலீசாருக்கு உரிய பாதுகாப்பு தேவை, தங்களை தற்காத்துக்கொள்ள நவீனரக ஆயுதங்கள் தேவை என அரசை வலியுறுத்தியும் போலீஸ் சங்கத்தை சேர்ந்த பலர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் பாரிஸ், கலயிஸ், லில்லே, டவ்லாம் உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த போலீசார் இந்த போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்று வருகின்றனர்.

தங்களது கோரிக்கையை கேட்க முன்வராத அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவை கண்டித்து நேற்று முன்தினம் இரவு பாரிசில் நடைபெற்ற போராட்டத்தில் மூன்றாயிரத்துக்கும் அதிகமான போலீசார் பங்கேற்றனர்.

ஐந்தாவது நாளான நேற்றிரவும் நூற்றுக்கணக்கான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் விரைவில் போலீஸ் சங்க பிரதிநிதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.