மன்னார்குடியில் 2 குழந்தைகளை கொலை செய்த தாய் ஒரு ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ 2-ம் தெரு பகுதியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது40). இவர் பழனியில் உள்ள அரசுகல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பெனிட்டா (35). இவர் குலமாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர்களது மகன் கவின்முகிழ்(12). மகள் தமிழிசை(8). இவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ந் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் பிணமாக கிடந்தனர். பெனிட்டா குளியல் அறையில் ரத்தக்காயங்களுடன் கிடந்தார். ஆனால் குளியல் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மர்மநபர்கள் குழந்தைகளை கொலை செய்துவிட்டதாக பெனிட்டா நாடகமாடி தப்பிவிட்டார். இந்த வழக்கில் கடந்த ஒரு ஆண்டாக துப்பு துலங்கவில்லை.
இந்தநிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பெனிட்டா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று பெனிட்டா வேலை பார்த்து வரும் பள்ளிக்கு மன்னார்குடி போலீசார் சென்றனர்.
அப்போது பள்ளிக்கு வந்த பெனிட்டாவை போலீசார் பிடித்து மன்னார்குடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பெனிட்டா தனது கணவர் மீனாட்சிசுந்தரத்துடன் ஏற்பட்ட தகராறில் தனது பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தது தெரியவந்தது.
மேலும் பெனிட்டா முதலில் தனது பிள்ளைகளை கழுத்தை அறுத்துக் கொன்றதும் பின்னர் அவர் குளியல் அறைக்குள் சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மன்னார்குடி போலீசார் பெனிட்டாவை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.