நான் எந்நேரமும் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கத் தயார்-கரு

255 0

அரசியல் கட்சிகளுக்கிடையில் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகக் கரு ஜயசூரியவே களமிறங்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ள நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்தத் தொலைபேசி உரையாடலை ஜனாதிபதி நடத்தியுள்ளார்.

நேற்றிரவு 15 நிமிடங்கள் வரை இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குகின்றீர்களா? என்று கரு ஜயரியவிடம் ஜனாதிபதி வினவியுள்ளார்.

“நான் எந்நேரமும் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கத் தயார். ஆனால், இது தொடர்பில் கட்சியின் உயர்பீடம்தான் இறுதித் தீர்மானம் எடுத்துப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதுவரைக்கும் என்னால் உறுதியான பதிலை வழங்க முடியாது” என்று இதன்போது கரு ஜயசூரிய பதிலளித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச களமிறங்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ள நிலையில், அவருடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் தொலைபேசியில் உரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.