தமிழ்த் தேசத்தினை கருவியாகப் பயன்படுத்தி சர்வதேச நலன்கள் மட்டும், அடையப்பட்டு எமது நலன்கள் புறக்கணிக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்காக சர்வதேச தரப்புக்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்படவேண்டிய நோக்கமும் எம்மிடம் இருக்கக்கூடாது.சர்வதேச அரசியலில் இலங்கைத் தீவின் முக்கியத்துவத்தினை கடந்த பத்தியில் விளக்கியிருந்தேன். அப் பத்தியில் தத்தம் நலன் சார் நடவடிக்கைகளை மையப்படுத்தி இயங்குகின்ற நாடுகள், இலங்கைத்தீவின் ஆட்சியினை தமக்குச் சார்பானதாக மாற்றியமைப்பதற்கு ஏற்ற வகையில், பூகோள அரசியலின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதனையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
தமிழ்த் தேசத்தின் சமகால வாய்ப்புகள் தொடர்பாக இப் பத்திகளின் வாயிலாகத் தெரியப்படுத்தி வருகின்றோம். இந் நிலையில் தமிழ் மக்களுக்கு எந்ளவிற்கு முக்கியத்துவமும், வாய்ப்புக்களும் உள்ளதோ, அதேயளவிற்கு, தமிழ்த் தேசத்திற்கு கிடைக்கின்ற வாய்ப்புக்களையும், முக்கியத்துவத்தினையும், தமிழ்த் தரப்புக்கள் சரியான முறையில் பயன்படுத்தாது விட்டால் ஆபத்துக்களும் உள்ளன. அத்துடன், இன்று, தமிழ் தேசத்திற்கு சார்பாக உருவாகியுள்ள வாய்ப்புக்களையும், முக்கியத்துவத்தினையும், தமிழ் அரசியல் தலைமைகளும், தமிழ் மக்களும் உரிய முறையில் புரிந்து, அதற்கேற்றவகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கில் இப்பத்தி எழுதப்படுகிறது.இந்த வகையில் இலங்கைத் தீவினுள் தத்தம் நலன்சார்ந்த விடயங்களுக்கான நகர்வுகளை நாடுகள் முன்னெடுத்துச் செல்கையில், அவ்வப்போது கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளாது அரசுக்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைத்து வாய்ப்புக்களைத் தொலைத்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் தமிழ்த் தேசத்தினுடைய வரலாற்றில் உண்டு.
இவ்வாறாக இழக்கப்பட்ட சந்தர்ப்பங்கள், பின்னர் தமிழ்த் தேசதத்தினை எவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்கியது என்ற வரலாற்று உதாரணங்களையும் முன்வைத்து இப் பத்தி நகர்கிறது. பிராந்திய மற்றும் பூகோள ரீதியான அரசியல் காரணங்களை அடிப்படையாக வைத்து, 1980 களில் தமிழ்த் தேசத்தின் போராட்டத்தினை இந்தியா தனது நலன்சார்ந்த நடவடிக்கைகளுக்காக கையில் எடுத்திருந்தது. இதனூடாக, இந்தியா, தனது பிராந்தியத்தில் இருக்கின்ற இலங்கைத் தீவில், ஏனைய சக்திகளின் பலம் ஓங்குவதைத் கட்டுப்படுத்த முற்பட்டது. அதனடிப்படையில், உருவான இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் வாயிலாக, தனது நலன்கள் காப்பாற்றப்பட்ட சூழ்நிலையில், இந்தியா செயற்பட்ட விதம் வெளித்தெரிந்த விடயமாகும். அதாவது, தனது நலனை கருத்தில்கொண்டு தமிழ் தேச விடுதலைப் போராட்டத்திற்கு, ஆயுதமும், பயிற்சியும் வழங்கிய இந்தியா, பின்னர் சிங்கள தேசத்துடன் இணைந்து தமிழ்த் தேசத்திற்கு எதிராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்றைய காலப்பகுதியில் செயற்பட்ட தமிழ் அரசியல் தரப்புக்கள், எமது மக்களின் அடிப்படை அரசியல் கொள்கைகள் என்ற விடயத்தில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி, நேர்மையாகவும் ஒற்றுமையாகவும் செயற்பட்டிருந்தால், இன்று தமிழ்த் தேசத்தின் இருப்பு அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் மக்கள் கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கக்கூடும்.கடந்த காலத்தில் ஏற்பட்டது போன்ற ஆபத்தான சூழ்நிலைகளை இனிவருங்காலத்திலும் தமிழ்த் தேசமானது எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காகவே, மேற்குறிப்பிட்ட கருத்துக்களை வரலாற்றின் வழி நின்று நான் சுட்டிக்காட்டுகிறேன். இன்று, இலங்கைத் தீவினை மையமாகக் கொண்ட சர்வதேச நலன்சார் போட்டிகள் உச்சம் பெற்றுள்ள நிலையில், அப் போட்டியினுள் தமிழ்த் தேசம் தனக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையைப் பணயம் வைத்து அல்லது விட்டுக்கொடுத்து விட்டு சகலதையும் இழக்கும் ஆபத்துக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது.கடந்த காலத்தில், இலங்கைத் தீவினை மையப்படுத்திய சர்வதேசத்தின் அரசியல் நலன் சார் போட்டிகளுக்கிடையில், தமிழ்த் தேசத்தின் இருப்பு பாதுகாக்கப்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளே காரணமாக இருந்தனர். ஆயினும், தமிழ் மக்களின் நலன்களுக்கு மாறாக, வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செயற்பட்ட தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் ஆயுதக் குழுக்களினால், சர்வதேச நலன்சார் போட்டிகளுக்கு மத்தியில் விடுதலைப் போராட்டம் வெற்றி பெறமுடியவில்லை.
இவ்வாறு, கடந்த காலத்தில் செயற்பட்டவர்களது தவறுகளை கருத்தில் கொண்டு, அவ்வாறான தவறுகள் இனியும் ஏற்படாதவாறு, இயலுமான வரை நிதானத்துடன் செயற்படவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். ஆகவே, இந்த பணியை சரியாக முன்னெடுக்க வேண்டும். இவ் வகையில் சமகால விடயங்களில் மக்கள் தெளிவாகவும் நிதானமாகவும் இருக்கவேண்டும் என்ற கட்டாயத் தேவையுள்ளது.முன்னைய பத்திகள் வாயிலாக தமிழர் பிரச்சினைகளை முன்வைத்து சர்வதேச நலன்சார் போட்டிகள் நகர்த்தப்படுகின்றன என்பதைக் கூறியிருந்தேன். இவ்வாறாகப் பார்க்கையில் தத்தம் நலன்களின் நோக்கில் முத்தரப்பாக தலையிடுகின்ற நாடுகள், எவ்வாறாக தமிழ்த் தேசத்தின் பிரச்சினைகளை மையப்படுத்தி செயற்படப் போகின்றன என்பது பற்றியும், அத்தகைய தருணத்தில், நாம் எத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்பது பற்றியும் தரப்புகள் வாரியாகப் பார்கப்படவேண்டியுள்ளது.தற்போது, சிறீலங்கா அரசு, இலங்கைத் தீவில் சீனாவின் நலன்களுக்கு இடமளிக்கும் வகையிலேயே நடந்து கொள்கின்றது. இதனை, தற்போதைய ஆட்சிப் பீடத்தோடு உருவான மாற்றமாக நாம் பார்க்க முடியும். ஆகவே தனது நலன்களின் அடிப்படையில் நாடுகள் தலையீட்டை மேற்கொள்கையில், சீனாவுக்கு தமிழ்த் தேசத்தின் பிரச்சினையை ஓர் கருவியாக கையில் எடுக்க வேண்டிய தேவைபாடுகள் குறைவு.அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு விரும்பும் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணம், சிறீலங்காவின் இன்றைய ஆட்சிபீடம் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்குள் இல்லை என்பதுவும் அதன் காரணமாக தமது நலன்சார் நிலைமைகள் பேணப்படாது போவதுமேயாகும்.
தமிழ்த் தேசத்தின் மீது, சிங்கள தேசத்தினால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களை நோக்குகையில், அது இன்று நேற்று அதாவது சிறீலங்காவின் இன்றைய ஆட்சிபீடத்துடன் ஆரம்பிக்கப்பட்டதொன்றல்ல. அது காலகாலமாக, மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களின் ஒர் தொடர்ச்சியான அரச கொள்கையாகவே அமைகின்றது. இவ்வாறாக, படிப்படியாக அரங்கேற்றப்பட்டு வந்த இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள், உச்சக் கட்டத்தினை அடைந்தது, சிறீலங்காவின் இன்றைய ஆட்சிக்காலத்திலேயே ஆகும். இவற்றை இக்கட்டுரையில் எடுத்துரைப்பதன் நோக்கம் சிங்களத் தேசத்தில் ஏற்படப்போகும் வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் தமிழர் தரப்பிற்கு எதனையும் பெற்றுத்தரும் என கற்பனை கொள்ளக் கூடாது என்பதற்காகவே. அதேவேளை, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு விரும்புவது போன்று சிங்கள தேசத்தில் ஏற்படுத்தப் படக்கூடிய வெறும் ஆட்சிமாற்றம், தமிழ்த்தேசம் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வாகாது.
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்காக, சிங்கள தேசத்தினால் தமிழ் தேசத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களை மேற்குலகு கையிலெடுத்துக்கொண்டாலும், அது அவர்களின் நலன்களை மையப்படுத்துவதாவே அமைகின்றது. மேற்குலகினால் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன்வாயிலாக மேற்கிற்குச் சார்பான ஓர் ஆட்சி உருவாகியதும், நலன்சார் அடிப்படையில் மேற்குலகின் முன்னுள்ள பிரச்சினைகள் தீர்வுக்குள்ளாகிவிடும். எனவே, மேற்குலகு விரும்புவது போன்ற ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்படும் இடத்து, இலங்கைத் தீவில் காணப்படும் தமிழ்த் தேசத்தின் அரசியல் பிரச்சினைகளை கையாளவேண்டிய சூழல் மேற்குலகிற்கு இல்லாமல் போய்விடக்கூடும்.இதேவேளை, மேற்குலகினால் ஆட்சிக்குக் கொண்டுவரப்படும் ஆட்சியாளர்களும், தேர்தல், அரசியல் என்று வருகையில் சிங்கள தேசத்தின் வாக்கு வங்கியிலேயே தங்கியிருக்கப்போகின்றார்கள். மேற்குலகினால் புதிதாகக் கொண்டுவரப்படும் ஆட்சியாளர்கள், சிங்கள தேசத்தின் வாக்கு வங்கியில் தங்கியிருக்கையில், அவர்கள் சிங்கள தேசத்தின் விருப்புக்கும், மனநிலைக்கும் மாறாக தமிழ்த் தேசத்துடன் நியாயபூர்வமான தீர்வொன்றுக்குச் செல்ல முடியாத நிலையே யதார்த்தத்தில் நிலவும். எனவே தான் புதிதாக ஆட்சிக்கு வருவோர், சிங்கள பேரினவாதத்தினால் ஆட்சியிலிருந்து தூக்கிவீசப்படாது இருப்பதற்கான உத்தியாக அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவிதத் தீர்வுமற்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தினையே (மாகாண சபைகளை) தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வாக திணிக்க மேற்குலகு முற்படுகிறது.
தமது நலன்களை நோக்காகக் கொண்டு, தமக்கு சார்பான ஆட்சியாளர்கள், தமது நலன் சார் கடமைகளைத் திறம்பட ஆற்றவேண்டும் என்றே மேற்குலகினர் எதிர்பார்ப்பார்களே தவிர, ஆட்சியில் அமரும் புதிய ஆட்சியாளர் தமிழர் விடயத்திற்காக சிக்கல்கல்களைச் சந்திப்பதை விரும்பமாட்டாகள்.இந்த அடிப்படையிலேயே தமிழ்த் தேசத்தின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், தமக்குச் சார்பான ஆட்சியாளர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளா வண்ணம் இருப்பதற்காக, எமது பிரச்சினை விடயத்தில், எவ்வித பெறுமதியுமற்ற 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினைத் ஒரு ஆரம்பப்புள்ளியாக பயன்படுத்த வேண்டும் என்பதை மேற்குலகு வலியுறுத்தி வருகிறது. இதனூடாக, தமிழ்த் தேசத்தினை அமைதிப்படுத்தி, சிங்கள தேசத்தின் அதிருப்தியினை சமாளித்துவிட அது விரும்புகிறது.யதார்த்தத்தில், மேற்கின் அபிலாசைப்படி இலங்கைத் தீவில் ஒருவர் ஆட்சிக்கு வந்தால் கூட, அவர் தமிழ் மக்களுக்கு எதுவித உரிமைகளையும் கொடுக்க மாட்டார் என்பது திண்ணம். இதனை மீறி, புதிதாக ஆட்சியில் அமருபவர் எதையாவது தமிழ் மக்களுக்கு கொடுக்க முற்பட்டால், அவர் சிங்கள பௌத்த தேசத்தினால் ஆட்சியில் இருந்து தூக்கிவீசப்படும் நிலையே ஏற்படும். சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமிழ்த் தலைவர்களுக்குமிடையில் இனப்பிரச்சினைத் தீர்வை மையப்படுத்தி ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் பேரினவாத நெருக்குதல்களால் கிழ்த்தெறியப்பட்ட முன்னுதாரணங்கள் இங்கு நினைவுகூரத்தக்கன.
அரசியல் தீர்வு விடயத்தில் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்குள் (மாகாண சபைக்குள்) தமிழ்த் தேசம் கட்டுண்டு போகது, எமது தேசத்தின் நலனை நோக்காகக் கொண்டு, நாம் ஒரு தனித் தேசம் எனவும், இறைமை உடையவர்கள் எனவும், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும், தாயகத்திலும், சர்வதேசரீதியிலும் உறுதியுடன் செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம். இவ்விடத்தில், இலங்கைத் தீவில் இடம்பெற்றது ஓர் இன அழிப்பு என்பதுடன், அது தற்போதைய ஆட்சிக் காலத்திலேயே உச்சக்கட்டத்தை அடைந்தது என்பதுவும் நாம் அறிந்தது. இதனையே நாம் வெளியுலகிற்கும் வலியுறுத்த வேண்டியுள்ளது.மேற்குலகின் தற்போதைய உடனடி தேவை ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாகும். சுருக்கமாகக் கூறுவதாயின் சீன சார்புடைய தற்போதைய ஆட்சியை மாற்றி மேற்கு சார்பு அரசாங்கம் ஒன்றை நிலைகொள்ளச் செய்வது இவர்களது நோக்கமாகும். இவ்வாறு, மேற்குலகினால் மேற்கொள்ளப்படும் ஆட்சிமாற்றமானது, சிங்கள தேசத்தவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிலைத்திருக்க வேண்டுமாயின், அவ் ஆட்சியானது தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்க முடியாது. ஆகவேதான், மேற்குலகம் இப்போதிருந்தே தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைத் தீர்வாக 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்ட மாகாணசபைகளையே தீர்வொன்றாக வலியுறுத்த வேண்டும் என விரும்புகின்றது.கட்டம் கட்டமாக அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்ளலாம் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை இந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கானதே.
இது தமிழ்த் தேசத்தின் இருப்புக்கு முரணனதும், ஆபத்தானதுமாகும் என்பதனை நாம் தெளிவுபடுத்துகின்றோம். இன்று, தமிழர் தரப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் பார்வையைச் செலுத்தும் நிலையில் நாம் இந்தப்பொறிக்குள் வீழ்ந்துவிடாது எமது முழுமையான கோரிக்கைகளை முன்வைத்து பேசவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.இலங்கைத் தீவில் சீனாவின் மேலாண்மை அதிகரிக்கக் கூடாது என்பதில் மேற்கைப் போன்றே இந்தியாவும் தீவிர அக்கறை செலுத்துகிறது. அதேவேளை, தன்னை மீறி வேறு எந்தவொரு சக்தியும் இலங்கைத் தீவில் ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது என்பதிலும் அது கவனமாகவுள்ளது. சிறீலங்கா அரசாங்கம் சீனாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்றுவிடக்கூடாது என்பதைக் காரணங்காட்டி, இந்தியா சர்வதேச அரங்கில் சிறீலங்காவை பாதுகாத்து வருகிறது. அதேவேளை, சிறீலங்கா அரசாங்கத்தை தனது காட்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கான அழுத்தம் கொடுக்கும் கருவியாக தமிழ்த் தேசத்தின் அரசியலை இந்தியா பயன்படுத்த வேண்டிய தேவையும் முன்னரை விடவும் வளர்ந்து வருகிறது. ஆயினும், அதனை மேற்கொள்வதற்கு சவாலாக தமிழ் மக்களின் இன்றைய மனோநிலையுள்ளது. ஏனெனில், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்தில் இந்தியாவின் வகிபாகம் உள்ளது என்ற ஆழமான கருத்துருவாக்கமே அதற்கான காரணமாகும்.
இதனை முறியடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, தமக்குச் சார்பான தமிழ் அரசியல் தலைமைகள் ஊடாக, இந்தியாவே பலம் வாய்ந்த விடுதலைப் புலிகளை அழித்ததுடன், சிறீலங்கா அரசாங்கத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரே சக்தியான நிலையிலுள்ளது என்ற கருத்துருவாக்கத்தை அது உண்டுபண்ணமுற்படுகிறது. இதனூடாக, தமிழ் அரசியல் தலைமைகள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கியே செல்ல வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்த முயற்சிக்கிறது. இதற்கான உத்தியாக, தமிழர்களை தோல்வி மனப்பான்மைக்குள் தக்க வைத்து, இந்தியாவின் தயவிலேயே தமிழர்கள் வாழவேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை மேற்கொள்வதில் இந்தியா குறியாகவுள்ளது. அத்துடன், 13ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபைகளையே தீர்வாகத் திணிப்பதில் இந்தியாவும், மேற்குலகும் ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளன.தனியே தமிழ்த் தேசத்தினை ஓர் கருவியாகப் பயன்படுத்தி சர்வதேச நலன்கள் மட்டும் பேணப்பட்டு தமிழ்த் தேசத்தின் நலன்கள் அடையப்படாது புறக்கணிக்கப் படுவதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்காக சர்வதேச தரப்புக்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்படவேண்டிய நோக்கமும் எம்மிடம் இருக்கக்கூடாது. அதேவேளை சர்வதேசத்தின் நலன்களும் தமிழ் மக்களின் நலன்களும் ஒருங்கே அடையத் தக்க ஒரு புள்ளியில் நாம் இருதரப்பும் சந்திக்கவேண்டும் என்பதே இன்றைய தேவையாகும். சர்வதேச நலன்களும் தமிழர் தரப்பு நலன்களும் ஒரு பொது வேலைத் திட்டத்தில் அடையத் தக்கதான சந்தர்ப்பங்கள் பலவுள்ளன. அதனை அடையாளப்படுத்துவதே தமிழ்த் தலைமைகளது வேலையாகும். ஆகவே இதனை மையமாக வைத்து செயற்பட வேண்டியதே தமிழ் தலைமைகள் முன்னுள்ள இன்றைய சிறந்த இராஜதந்திரமாகவும் அமைகின்றது.