இலங்கையும் இந்தியாவும் கையெழுத்துப் போட்டு இரு நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்த்தையே இலங்கை அரசு மீறியிருக்கின்ற நிலையில் நடைபெறவிருக்கும் ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வகித்தாலும் அதனை அரசு நிறைவேற்றுமா என்பது கேள்வியே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் மூன்றாம் தரப்பு உறுதிமொழியுடனான மத்தியஸ்தம் என்ற விடயம் நல்லதாக இருந்தாலும் அதற்கமைய அணைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்து முடிவெடுப்பது வரவேற்கப்படக் கூடிய விடயமாக இருந்தாலும் இவ்வாறு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வகிக்க எந்த நாடு முன்வரப்போகின்றது.
அவ்வாறு வருகின்ற நாடு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமா என்றும் பார்க்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவிருக்கும் ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பிலும் இத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணி முன்வைத்துள்ள யோசனை தொடர்பிலும் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அடுத்த ஐனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது சம்மந்தமாக எந்தவித முடிவையும் எடுக்கவில்லை. ஏனென்றால் யார் வேட்பாளர் என்பது இதுவரையில் தெரியாது. இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் பலரது பெயர்களும் கூறப்பட்டுக் கொண்டிருக்கிறது.