தனக்கு எதிராக எத்தனை முறை நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டாலும் அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராகவுள்ளதாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர வேண்டுமானால் ஏதாவது குற்றம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு நான் எந்த குற்றமும் செய்யவில்லை. இதனை பொலிஸாரும் தெரிவித்துள்ளனர். அவ்வாறில்லையென்றால் எனக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளிக்குமாறும் கூறப்பட்டது.
அதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டது. வழங்க்கப்படும் முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்போது மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை பற்றி பேசும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அப்போது எதையுமே செய்யவில்லை.
வாய்ப்பு வழங்கப்பட்ட போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப் போவதாக அவர்கள் கூறுகின்றமை அரசியல் பழிவாங்கலாகும் என்றும் கூறினார்.