முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் பெண்களின் உரிமைகளுக்கும் கௌரவத்திற்கும் மதிப்பளித்து திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நாங்கள் வலியுறுத்தி வந்திருக்கும் நிலையில், அப்போது முஸ்லிம் அரசியல்வாதிகளும் உலமாக்களும் இஸ்லாமிய மத நிறுவனங்களுமே இந்தத் திருத்தங்களை மேற்கொள்வதை இழுத்தடிப்புச் செய்து தடைகளை ஏற்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது பேரினவாதிகளால் பிரயோகிக்கப்படும் அழுத்தத்தின் விளைவாக இஸ்லாமிய மதத்திற்கு முரணான திருத்தங்களை மேற்கொள்வதையும் அதேபோன்று எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பு செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்று எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான ஷர்மிளா செய்யத் தெரிவித்தார்.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் விரைவாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், இச்சட்டத்தில் திருத்தங்களைக் கோரி கடந்த காலத்தில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த ஷர்மிளா செய்யத்திடம் வினவியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முஸ்லிம் பெண்கள் பலவருட காலமாகவே கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக பெண்களில் திருமண வயதெல்லையை 18 ஆக நிர்ணயித்தல், திருமணப்பதிவுச் சான்றிதழில் பெண்களும் கையெழுத்திடல் உள்ளடங்கலாக பெண்களின் உரிமைகளுக்கும் கௌரவத்திற்கும் மதிப்பளித்து திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த காலங்களில் வலியுறுத்தியிருக்கிறோம்.
எனினும், அப்போது முஸ்லிம் அரசியல்வாதிகளும் உலமாக்களும் இஸ்லாமிய மதநிறுவனங்களுமே இந்தத் திருத்தங்களை மேற்கொள்வதை இழுத்தடிப்புச் செய்து தடைகளை ஏற்படுத்தி வந்தனர். எனினும் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து முஸ்லிம்களின் உரிமைகளையும் தனித்துவத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு செயற்படும் பேரினவாதிகளின் கோரிக்கைகளால் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதில் துரிதநிலையொன்று ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் எத்தகைய மாற்றங்களை நாங்கள் கோரியிருந்தோம் என்பதைக் கருத்திற்கொண்டு அவற்றையே திருத்த முற்பட வேண்டும். மாறாக தற்போது பிரயோகிக்கப்படும் அழுத்தத்தின் விளைவாக இஸ்லாமிய மதத்திற்கு முரணான திருத்தங்களை மேற்கொள்வதையும் அதேபோன்று எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பு செய்வதையும் தவிர்க்க வேண்டும்.