இந்திய இராணுவம் நிகழ்த்திய வல்வை படுகொலையின் ஆறாத வடு.!

375 0

வல்வை படுகொலையின் 30 ஆவது நினைவு தினம் இன்றாகும்.

வல்வை படுகொலையும், பல வருடங்களின் பின் பாதிக்கப்பட்டவர் ஒருவரின் நினைவு பதிவும்.

வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்த அட்டுழியங்கள்!!!

1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.

ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை. வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.

63 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடு இன்றி.

100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.

123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.

45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.

வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது, பல ஆயிரக்கணக்கான நூல்கள். தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி, நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.

176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.

எங்கும் சடலங்கள், அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள், காயமடைந்த, கொல்லப்பட்ட உறவினர்களின் அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் ரண வடுவாக அச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர்.

வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?

முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச்செய்தி வந்தது.

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய
பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை.

வல்வெட்டித்துறை மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய இராணுவம் புரிந்த கொலைகள், கொள்ளைகள், பாலியல் கொடுமைகள், சித்திரவதைகள், வீடழிப்பு, சொத்தழிப்பு போன்றவற்றை சந்தித்தே இருக்கின்றனர். உண்மை சிலருக்கு சுடலாம் ஆனால் இவை என்றும் மறைந்துவிடாது மக்களின் மனங்களில் இருந்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்தும்.! இது பற்றி வல்வை படுகொலை எனும் நூல் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்து அவனபடுத்தப்பட்டது குறிபிடக்தக்கது.

இது பற்றி இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கனடாவிலிருந்து சேது மாதவன் அவர்கள் தனது சமுக வலைத்தளத்தில் 26 வருடங்களின் பின் இன்று இவ்வாறு எழுதியுள்ளார்.

வல்வை படுகொலைகள் நடந்து வருடங்கள் 26 ஓடிவிட்டன. அந்த பயங்கர நாட்களின் பல நிகழ்வுகள் இப்பொழுதும் என்நெஞ்சில் நிற்கின்றன. கலாதேவன், பாபு ஆட்கள் வீட்டில் நின்றபோது தாக்குதல் நடக்கப் போவதாகவும் உடனே வீட்டை விட்டு ஒடுமாறும் கூறிய அவர்கள் எதிர்வீட்டுத் தம்பி தரா ( இப்பொழுது மருத்துவர் சிவபாலன் ) . அந்த அவசர கணத்தில் கலாதேவன் அண்ணா வீட்டார் வீட்டை விட்டு வெளிக்கிடும் முன்னே ஆரம்பித்த யுத்தம். பயத்தில் அவர்களுக்கு உதவாது விட்டுவிட்டு ஓடிய என் கோழைத்தனம். அன்று மினி சினிமா செல்லவிருந்து கடைசி நேரத்தில் மனதை மாத்தி அதற்குப் போகாத நானும் கித்துளும். ஓடு ஓடு என்று ஓடி இன்பருட்டி கிராமத்தில் ஓடும் வழியில் சந்தித்த நண்பர்களுடன் தங்கியது. வழியில் திக்கத்தில் கண்ட புலிகளின் தாக்குதல் அணியினர். கூட ஓடிவந்த நண்பனை துப்பாக்கிக் காயத்துடன் வைத்திய சாலையில் விட்டுவிட்டு ஓடிவந்து வழியில் எங்களுடன் இணைந்த நவநீதன். வேறு வழியில் ஓடி வல்வெட்டியில் புகலிடம் அடைந்திருந்த வேளையில் மட்டுமட்டாக உயிர் தப்பிய என் குடும்பத்தினர்.சந்தியில் இந்தியன் Army விட்டுவிட்டுப்போன உடல்களில் தனது கணவனினது உடலும் இருக்குமோ எனத் தேடிய சிதம்பரநாதன் teacher. அவருடன் சேர்ந்து ஒவ்வொரு உடலாக செக் பண்ணிய என் அம்மா. இவ்வாறு பல சம்பவங்கள் மனதில் நிற்கின்றன.

எல்லாம் முடிந்தபின்னால் பார்த்த பொழுது எம் நண்பர்கள் உறவினர்கள் பலர் எம்மை விட்டுப் போய்விட்டதை அறிந்து கொண்டோம். மதி, செல்வானந்த வேல், ரவி அண்ணா, சங்கர் அண்ணா, புஸ்பா அண்ணாவின் அம்மா, அவரது சகோதரன், ராதன் அண்ணாவின் அப்பா அவரது அண்ணா என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. மயிரிழையில் உயிர் தப்பிய பலரது கதைகளும் ஒவ்வொன்றாக எம்மை வந்தடைந்தன. அதை நினைக்கும் பொழுது 26 வருடங்களின் பின்பும் என் உடல் மெல்ல நடுங்குகிறது.

இதன் மூலம் அந்த ஆபத்தான தருணங்களில் எமக்கு அதரவு அளித்து எம்மைப் பாது காத்த வல்வெட்டி, கம்பர்மலை, இமையாணன், திக்கம், பொலிகண்டி, இன்பருட்டி, தொண்டைமானாறு , உடுப்பிட்டி, மயிலியதனை, காட்டுப்புலம், நெல்லியடி, கரணவாய், வதிரி, மந்திகை, பருத்தித்துறை, சக்கோட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த அன்புள்ளம் மிக்க மக்களுக்கு வல்வெட்டித்துறை மக்கள் சார்பாக நன்றி கூறுகிறேன்.

அன்று உயிர் நீத்த எம்மக்கள் அனைவருக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.

. யுத்தம் ஏற்படுத்தும் வடுக்கள் எப்பொழுதும் ஆழமானவை.