13 வருடங்களிற்கு முன்னர் மூதூரில் அரசசார்பற்ற பணியாளர்களை படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த படுகொலை உட்பட முக்கிய படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இன்னமும் தண்டிக்கப்படாமை சர்வதேச நீதித்துறையின் உதவி இலங்கைக்கு அவசியமாகவுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2006 ஆகஸ்ட் நான்காம் திகதி பாரிசை தளமாக கொண்ட அக்சன் பார்ம் அரசசார்பற்ற அமைப்பின் பணியாளர்கள் அரச படையினரால் படுகொலை செய்யப்பட்டனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
யூன் 13 2019 இல் இலங்கையின் சட்டமா அதிபர் அக்சன் பார்ம் படுகொலை உட்பட முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பாரிய படுகொலைகள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார் என்பதையும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பதின்மூன்று வருடங்கள் ஆகின்ற போதிலும் இலங்கையின் காவல்துறையினரால் 17 மனித உரிமை பணியாளர்கள் படுகொலை செய்ய்பபட்டதற்கான காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கை இயக்குநர் ஜேம்ஸ் ரொஸ் தெரிவித்துள்ளார்.
இந்த கொலைகள் மற்றும் ஏனைய படுகொலைகள் குறி;த்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதித்துறையின் உதவி இலங்கைக்கு அவசியமாகவுள்ளதை இந்த தாமதம் புலப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூதூரினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக இலங்கை படையினருக்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையில்இடம்பெற்ற மோதல்களின் பின்னரே நான்கு பெண்கள் உட்பட 16 தமிழர்களும் ஒரு முஸ்லீம் பிரஜையும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற பணியாளர்களே கொல்லப்பட்டனர்
இந்த படுகொலை தொடர்பில் மனித உரிமைகளிற்கான பல்கலைகழக ஆசிரியர் குழு முழுமையான அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது,
நேரில் பார்த்தவர்கள் மற்றும் ஆயுதங்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கை படையினரே இந்த படுகொலை செய்தனர் என மனித உரிமைகளிற்கான பல்கலைகழக ஆசிரியர் குழு குற்றம்சாட்டியிருந்தது.
இலங்கை கடற்படையின் விசேட படைப்பிரிவினரும் இரு காவல்துறை உத்தியோகத்தர்களும் இதற்கு காரணம் என அந்த குழு குற்றம்சாட்டியிருந்தது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நீதிபதிகள் மற்றும் சர்வதேச பங்களிப்புடன் கூடிய தீர்ப்பாயம் குறித்து இலங்கை அரசாங்கம் ஐநாவிற்கு உறுதியளித்தது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மூதூரில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களும் ஏனையவர்களின் குடும்பத்தவர்களும் தங்களிற்கு நீதி கிடைக்ககூடிய அரசாங்கத்தின் நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.