பல்கலைக மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு பொலிஸார் நடத்திய திட்டமிட்ட கொலையே -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-

462 0

1பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாகிப் பிரயோகம் திட்டமிட்ட கொலையே என்று தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இக் கொடூர கொலை சம்பவம் தொடர்பான வன்மையான கண்டனத்தினையும் பதிவு செய்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கே.கே.எஸ் வீதி குளப்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு கருத்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றும் இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக் கொடூர சம்பவத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த நிலையில் குறித்த மாணவர்களை தாம் சுட்டதிற்கான காரணங்களாக பொலிஸார் எதனை குறிப்பிட்டாலும் அக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க முடியாது.
சமாதான காலத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் பொலிஸாருக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டதாக எந்த ஒரு சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை.
இந்த நிலையில் பொலிஸார் தமக்கு உயிர் ஆபத்து இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிலில் சென்று குறித்த மாணவர்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காது, கொலை செய்தமை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். மாணவர்களை கொலை செய்யும் நோக்குடன் பொலிஸார் துப்பாக்கி பியோகம் மேற்கொண்டனர் என்பது இதில் இருந்து உறுதியாகின்றது.
இந்த விடையத்தினை மூடி மறைப்பதற்கான பல செயற்பாடுகள் இனிவரும் நாட்களில் மேற்கொள்ளப்படலாம். எனவே இவ்விடயத்தில் சட்டத்தினையும், நீதியினையும் நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நீதவான் இவ்விடயங்கள் தொடர்பாக அவதானிக்க வேண்டும்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நீதியினைப் பெற்றுக் கொடுப்பதற்காக சட்டத்தரணிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சி என்ற ரீதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நீதி பெற்றுக் கொடுக்க கரிசனையுடன் செயற்படும் என்றார்.