பிரசன்ன ரணதுங்க உட்பட மூவர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

457 0

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க உட்பட மூவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை செப்டம்பர் 17 ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சு திலகரட்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வெலிக்கடை சிறைக் கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கு விசாரணையில் நீதிபதி பங்கேற்க வேண்டியிருந்ததால் இந்த வழக்கை ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்தார்.

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் குடியிருக்கும் சட்டவிரோத குடியிருப்பாளர்களை அப்புறப்படுத்தி கொடுக்க ஜெராட் மெண்டிஸ் என்ற வர்த்தகரிடம் 64 மில்லியன் ரூபாய் பணத்தை கேட்டு பலவந்தப்படுத்தி, அச்சுறுத்தியதாக பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி உட்பட மூன்று பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான நரேஷ் ஃபாரிக் வெளிநாட்டில் கைதுசெய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை தொடர நீதிமன்றம் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.