வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 500 பயனாளிகளுக்கு 2016 ஆம் ஆண்டு உதவி வழங்கும் திட்டத்திற்கு அமைய இன்று வவுனியாவில் 100 பயனாளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இதற்கமைய பயனாளிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள்.குளிர்சாதனப் பெட்டிகள், போன்றன வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் வடக்கு மாகாண உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எஸ்.மயூரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய கிராமிய போக்குவரத்து அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன்,தென்பகுதியிலுள்ள சிங்களவர் வாழ்வாதார உதவிகளுக்கு முட்டுக்கட்டை போடாதபோதும் கணக்காய்வு திணைக்களகத்தில் இருக்கின்ற எமது ஒரு சில தமிழர்கள் இந்த உதவித்திட்டங்களுக்கு தடை போடுகிறார்கள் என நினைக்கின்ற போது வேதனையாக இருக்கின்றது என சுட்டிக்காட்டினார்.
அத்துடன் குறித்த நிகழ்வில் உரை நிகழ்த்திய வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம்,30 ஆண்டு காலங்களாக எமது மகாணத்தில் யுத்தம் நடைபெற்றதன் காரணமாக எமது மாகாணத்தில் அபிவிருத்திகள் நடைபெறவில்லை ஆகவே அந்த 30 ஆண்டுகள் நாங்கள் பின்நோக்கி நிற்பதை முன்னுக்கு கொண்டுவரப் பாடுபடவேண்டும் என குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வாழ்வாதார உதவிகளை செய்வதற்கு விருப்பம் இருந்த போதிலும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டதன் காரணமாக உதவிவழங்குபவர்களின் எண்ணிக்கை குறைக்கவேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டதாக குறிப்பிட்டதுடன் ஏனைய இயக்கங்களை சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு உதவித்திட்டங்களை வழங்கிய அமைச்சர் டெனீஸ்வரனுக்கு நன்றி தெரிவித்தார்.