இலங்கையுடனான உத்தேச மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழ் அமெரிக்கா எந்தவொரு நிலத்தையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போவதில்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறியிருக்கிறார்.
இலங்கை – அமெரிக்க வர்த்தக கவுன்சிலின் வருடாந்தப் பொதுக்கூட்டம் செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட அமெரிக்கத் தூதுவர், சகலருக்குமான பொருளாதார வாய்பபுக்களை உருவாக்குவதற்கு உதவுவதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்ய அமெரிக்கா விரும்புகிறது.
பலம் மிக்கதும், சகல தரப்பையும் அரவணைப்பதுமான பொருளாதார வளர்ச்சி இலங்கையின் சுயாதிபத்தியத்தை மேம்படுத்தும். இது தொடர்பானதே மிலேனியம் சவால் ஒத்துழைப்பு அபிவிருத்தி உடன்படிக்கை ஆகும் என்று கூறினார்.
இந்தக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்கவும் கலந்துகொண்டார்.
அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சகல வீதிகளினதும் மேற்பார்வையும், கட்டுப்பாடும் இலங்கையிடமே இருக்கும். அமெரிக்கா எந்தவொரு நிலத்தையும் சொந்தமாக்கப் போவதில்லை. கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவோ, நிர்வகிக்கவோ போவதில்லை. இந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கையில் நிலங்களின் கட்டுப்பாட்டை அமெரிக்கா எடுக்குமென கவலை வெளியிடப்படுகிறது.
இலங்கை அரசாங்கமும், அமெரிக்காவும் தனியார்துறையுடனும், சிவில் சமூகத்துடனும் சேர்ந்து கூட்டாக வகுத்திருக்கும் உத்தேச மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கை இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு 48 கோடி அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதை நோக்காகக் கொண்டதாகும் என்று கூறினார்.