மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி

301 0

வடக்கில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்றை நடத்துவதற்கு எதிர்வரும் செம்டெம்பர் 7ஆம் திகதி அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது. 

தமிழ் மக்கள் பேரவையினால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தமிழ் மக்கள் பேரவையின்  ஏற்பாட்டில் எதிர்வரும்  செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி தமிழினத்தின் அவலத்தையும் பேரினவாத சக்திகளின் கபடத்தனத்தையும் உலகறியச் செய்கின்ற  மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமாகும்.

இலங்கை மண்ணில் பெரும்பான்மை இனத்தின் ஆட்சியாளர்கள் தமிழ்மக்களை ஏமாற்றி காலம் கடத்துகின்ற தந்திரோபாயத்தைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர்.
வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்தேறிய யுத்தம் தமிழின அழிப்புக்கானது என்பதைச் சர்வதேச சமூகம் ஏற்றுள்ள போதிலும்  தமிழினத்திற்கு ஏற்பட்ட பேரிழப்புகளுக்கும் அவலங்களுக்கும் இன்னும்  நீதி கிடைக்கவில்லை என்பதை நடுநிலை கொண்ட எவரும் ஏற்றுக்கொள்வர்.

நல்லாட்சியில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் என்று   உறுதியளிக்கப்பட்டது. ஆனால் எதுவுமே நடந்தாகவில்லை. மாறாகப் புதுப் புதுப்பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றின்பால் தமிழ்மக்களைத் திசை திருப்பி தமிழ்மக்களை உளவியல் ரீதியில் தாக்குகின்ற மிக மோசமான நடவடிக்கைகளை  பேரினவாத ஆட்சியாளர்கள் தொடர்ந்தும்  செய்து கொண்டே இருக்கின்றனர்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று கூறி முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தமும் அப்படியே நின்று போயிற்று. அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாகினால் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்பிய தமிழ் அரசியல் தரப்புகளும்  இப்போது கைவிரித்து,  இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டனர் என்ற உண்மையைப் பகிரங்கமாக ஏற்றுள்ளன.

இவைதவிர,  காணாமல் போனவர்களின் உறவுகள் இன்றுவரை  தங்கள் உறவுகள் எங்கே?, அவர்களுக்கு நடந்தது என்ன? என்று கேட்கின்றனர். மனிதவுரிமைகள் பற்றி அதிகமாகப் பேசப்படுகின்ற சமகாலத்தில்;  காணாமல் போன எங்கள் தமிழ் உறவுகளுக்கு நடந்தது என்ன? என்பதைக்கூட அறிய முடியாத அளவில் எங்கள் அவலங்கள் அவதானிக்கப்படாதவையாக ஆக்கப்பட்டுள்ளன.

ஆட்சியாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் தமிழின விரோத செயற்பாடுகளைக் கண்டும் காணாமல் விடுகின்ற துர்ப்பாக்கிய நிலைமை சர்வதேச சமூகத்திடம் இருப்பது  வேதனைக்குரியது.

ஆயினும் இத்தகையதோர் நிலைமைக்குப் பின்னால், பேரினவாத ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்துவருகின்ற அதர்மங்களும் அட்டூழியங்களும் வலுவான முறையில்  சர்வதேசத்தின் பார்வைக்கும் கவனத்திற்கும்  முன்வைக்கப்படவில்லை என்பதை  ஏற்றுத்தானாக வேண்டும்.
இவைதவிர, தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலைக்காக எத்தனையோ தடவைகள் உண்ணாவிரதப் போராட்டங்களை சிறைகளில் முன்னெடுத்தனர்.  ஆனால்  இன்றுவரை  அவர்களுக்கு விடுதலை வழங்கப்படவில்லை என்றால், எங்கள் தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களின் நிலைப்பாடு எவ்வாறாக  உள்ளதென்பதை  எவரும் புரிந்து கொள்ளமுடியும்.

இவையாவற்றுக்கும் மேலாக, தமிழர்களின் வரலாற்றுப் பெருமைமிக்க இடங்களை ஆக்கிரமிப்பதும் பௌத்த விகாரைகளை அமைப்பதும் அதனூடு தமிழர்களின் வரலாற்றுச் சான்றாதாரங்களை அழிப்பதும்  குறித்த இடங்களில் ஏலவே பௌத்த விகாரைகள் இருந்துள்ளன என்றும் அவை பௌத்த சிங்கள வரலாற்றிடங்கள் என்றும் பொய்ப்பிரசாரம் செய்கின்ற கொடுமைத்தனம்  வேகமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இதன் உச்சமே கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் இருந்த பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை அமைக்கின்ற  நடவடிக்கையாகும்.
இந்நிலையில் தடுக்கவும் தட்டிக்கேட்கவும் தமிழர்கள் நாதியற்றவர்கள் என்று நினைக்கும் பேரினவாதத்திற்குப் பதிலடி கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.
அதிலும் ஒட்டுமொத்தத் தமிழ்மக்களும் ஒன்றுபட்டு தங்கள் உரிமைக்காகப் பேரெழுச்சி கொண்டெழுவர் என்பதை  உலகிற்கு உறுதியாகச் சொல்ல வேண்டிய காலகட்டத்தில்  நாம் இருக்கின்றோம்.

இந்நிலையில் எமக்குள் இருக்கக்கூடிய அகமுரண்பாடுகளைத் தூக்கியெறிந்துவிட்டு அரசியல் பேதங்களை மறந்து, எம் தமிழினம் சுதந்திரத்தோடும் உரிமையோடும் வாழவேண்டும்; .எங்கள் இனத்திற்கு அவலம் இழைத்தவர்கள் தண்டனை பெற வேண்டும்;. இன்றுவரை கண்ணீரும் கம்பலையுமாய் அலையும் எங்கள் உறவுகளின் துயரம் தீர்க்கப்படவேண்டும்;. தமிழர் தாயகம் ஆக்கிரமிப்பற்ற தமிழர் தேசமாக எழுந்து நிற்கவேண்டும் என்ற ஒரே இலக்குடன் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செப்டெம்பர் 7 ஆம் திகதி  நடைபெறும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் பங்கேற்க வேண்டுமென தமிழ்மக்கள் பேரவை அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது.

நமக்கிடையே இருக்கின்ற அரசியல் பேதங்களும் ஒற்றுமையீனங்களும்  கருத்து மோதல்களும் எங்கள் இனத்திற்கு ஆபத்தாக முடியுமென்பதால், மீண்டும் மீண்டும் நாம் கேட்பது  அரசியல் பேதங்களை மறந்து தமிழ் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒன்றுபட்டு, மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில்  பங்கேற்க வேண்டும் என்பதாகும்.

இந்த ஒற்றுமை ஒட்டுமொத்தத் தமிழ்மக்களையும் பேரணியில் பேரலையாக ஒன்றுபட வைக்கும் என்பது எம் அசைக்க முடியாத நம்பிக்கை.
எதிர்வரும் செப்டெம்பர் 7 ஆம்  திகதி  வடக்கு- கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகம் தழுவியதாக யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள  மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் தமிழ் மக்களின்  மிகப்பெரும் சக்திகளாக இருக்கின்ற அனைத்து தமிழ்க் கட்சிகள், அனைத்துப் பொது அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள், மதபீடங்கள், பெண்கள் அமைப்புக்கள், மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், விவசாய, கடற்றொழில் சங்கங்கள், சமாசங்கள் என அனைத்து அமைப்புகளும் ஒன்றாகத் திரண்டெழுந்து தமிழர்களின்  எழுச்சிப் பிரவாகத்திற்கு  உத்வேகம் கொடுக்க வேண்டும்.

இவற்றுக்கு மேலாக, தமிழ் இனத்திற்கு இழைக்கப்படும்  அநீதி கண்டு கொதிப்படைகின்ற முற்போக்கு சக்திகள் சிங்கள- முஸ்லிம் சகோதரர்களிடம் இருக்கவே செய்கின்றன.
எனவே தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்ற  சிங்கள, முஸ்லிம்  முற்போக்கு அமைப்புக்கள் செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள  மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குத் தங்கள் தார்மீக ஆதரவை வழங்குவதோடு அவர்கள் கலந்துகொள்ளவும் வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில்  தமிழ்மக்கள் பேரவை கேட்டு நிற்கிறது.

அன்பார்ந்த தமிழ்மக்களே! பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு  தமிழர் தாயகத்திற்குள் ஊடுருவி விட்டது. ஏற்கனவே படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடுவிக்க மனமின்றி காலம் கடத்தப்படுகிறது.

இந்த வேளையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பேரணியாக எழுச்சிபெற்று எங்கள் அவலத்தை உலகறியச் செய்வோம். இது தமிழினம் வாழ்வதற்கான  எழுகை.
உங்கள் ஒவ்வொருவரின் வரவும் நிச்சயம் சர்வதேச சமூகத்திடம் மிகப்பெரும் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் என்பதால்  செப்டெம்பர் 7 ஆம் திகதி  பேரலையாய் எழுந்து  பேரணியில் கலந்து  கொள்ளுங்கள் என  தமிழ் மக்கள் பேரவை உங்களை அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது.