ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கை குறைப்பு- டிரம்ப் உத்தரவு

258 0

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

இதில் அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. ஆனாலும் தலீபான்களை முழுமையாக வீழ்த்த முடியவில்லை. இதனால் அரசுக்கு ஆதரவாக தலீபான்களுடன் சண்டையிட அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. தனது படைகளை அமெரிக்கா முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என தலீபான்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இது குறித்து கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க டிரம்ப், எனக்கு உத்தரவிட்டுள்ளார். முடிவில்லாத போரை முடிவுக்கு கொண்டு வருவதிலும், பதற்றத்தை தணிப்பதிலும் டிரம்ப் தெளிவாக இருக்கிறார்” என்றார்.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலீபான்களுடனான அமெரிக்க பேச்சுவார்த்தை, சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தி நீண்டகால உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவரும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.