ஆடி அமாவாசை விரதமான இன்று 31 ஆம் திகதி திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் தமது பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.
யுத்தத்திற்கு பின்னர் கன்னியா பகுதி பௌத்த மத தலைவர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இவ்விரத்தை ஆலய பரிபாலன சபையினரின் முயற்சியால் சிறப்பாக இடம் பெற்றுவருகின்றது
இதன் போது இங்கு வருகை தந்த பக்தர்கள் கன்னியா வெந்நீருற்றில் குளித்து விட்டு சிவாலயத்திற்கு முன் அமைக்கப்பட்டுள்ள மதக் கிரிகை நிலையத்தில் அந்தனர்களால் மேற் கொள்ளப்பட்ட கிரியை முறையின் பின் எள்ளும் நீரும் இறைத்து இறந்த தமது தந்தையருக்கான பிதுர் கடனை செய்து தான தர்மம் வழங்கும் கருமங்கள் இடம் பெற்றது.
இதேவேளை இப்பகுதியில் ஏட்டிக்குப் போட்டியாக அங்கிருக்கும் பௌத்தர்களால் சைத்தி இருக்கும் பகுதியாக குறிப்பிடும் இடமான சிவாலயத்திற்கு முன்னுள்ள மேட்டுப் பகுதியில் பௌத்த மத துறவிகளின் வழிகாட்டலில் பல பௌத்த மக்கள் கலந்து கொண்ட அதிஸ்டான பூசை எனப்படும் விசேட பூசையை நடாத்தி அதில் நூற்றுக்கணக்கான பௌத்த மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வு இந்து மக்களின் புனித நிகழ்வான ஆடி அமாவாசை நிகழ்வை குழப்புவதற்காக சில பௌத்த துறவிகள் மற்றும் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளின் செயலாகவே நோக்குவதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்து பக்தர்கள் கவலை வெளியிட்டனர்.