ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் இன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய ஸ்தலங்களில் ராமேசுவரம் ராம நாதசுவாமி கோவில் தலையாய திருத்தலமாகும்.
தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய இந்த புண்ணிய ஸ்தலம் காசிக்கு நிகரானதாகும். காசியாத்திரை ராமநாத சுவாமியை ராமேசுவரத்தில் வழிபட்ட பின்னர்தான் நிறைவடைகிறது.
இத்தகைய புனிதமும், புகழும் மிக்க ராமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாண விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 7-வது நாளான இன்று ஆடி அமாவாசையாகும். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை முதலே ராமேசுவரத்தில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது.
அக்னி தீர்த்த கடலில் நீராடிய அவர்கள் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ராமநாத சுவாமி கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி – பர்வத வர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசித்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு பர்வதவர்த்தினி அம்மன் தங்க கருட வாகனத்தில் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது.