‘ரூட் தல’ மோகத்தில் இருந்து மீண்டு வரும் மாணவர்கள்

308 0

கத்தியை தீட்டாமல் புத்தியை தீட்டி வாழ்க்கையில் முன்னேறி காட்டுவோம் என்று மீண்டும் போலீஸ் அதிகாரிகளிடம் ‘ரூட் தல’ மாணவர்கள் உறுதி அளித்துள்ளனர்.சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாநகர பஸ்சை வழிமறித்து டிரைவர்-பயணிகளை மிரட்டி கீழே இறக்கிவிட்டு விட்டு சக மாணவர்களை இன்னொரு தரப்பு மாணவர்கள் நீளமான பட்டாக்கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டிய காட்சிகளை அப்பகுதியில் மாடியில் நின்று பொதுமக்கள் சிலரே செல்போனில் பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டனர். இந்த காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தின.

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே யார் பெரியவன்? என்பது தொடர்பாக நீண்ட காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது. கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி, மெரினா கடற்கரையில் உள்ள மாநில கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, ராயப்பேட்டை புதுக்கல்லூரி உள்ளிட்ட கலைக்கல்லூரி மாணவர்களுக்கு இடையேதான் ‘ரூட் தல’ மோதல் இருந்து வருகிறது.
மாணவர்கள் மோதல்

கல்லூரிகளுக்கு மாநகர பஸ்களில் வரும் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தலைவனாக செயல்படும் மாணவர்தான் ‘ரூட்தல’ என்று அழைக்கப்பட்டார். இந்த ‘ரூட்தல’ மாணவர் சொல்வதை கேட்டுத்தான் மாநகர பஸ்களில் மற்ற மாணவர்கள் செயல்பட வேண்டும். இல்லையென்றால் அடிதடி-வெட்டு குத்தாகிவிடும். இப்படி ஏற்பட்ட மோதலில்தான் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை தூக்கி ரவுடிகளை போல சண்டை போட்டனர். இது தொடர்பாக 8 மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இதனை தொடர்ந்து ‘ரூட்தல’ பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். 17 வழித்தடங்களில் சுமார் 100 ரூட்தல மாணவர்கள் ரகளை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரையும் களை எடுக்கும் வகையில் ஒரே நாளில் 58 ரூட்தல மாணவர்களை வேட்டையாடி பிடித்தனர்.

இவர்கள் அனைவரும் ‘இனி தவறு செய்ய மாட் டோம்’ என்று உறுதிமொழி எடுத்தனர். பாண்டு பத்திரமும் எழுதி கொடுத்துள்ளனர். இதன் மூலம் ஓராண்டு காலத்துக்குள் உறுதிமொழியை மீறும் மாணவர்கள் சிறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

போலீஸ் பிடி இறுகியதால் ‘ரூட்தல’ மாணவர்கள் பஸ்களில் வாலை சுருட்டி வைத்துக்கொண்டு அமைதியாக பயணம் செய்து வருகிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக பயணிகளும் எந்தவித பிரச்சினையுமின்றி பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உறுதிமொழி எடுத்துள்ள ரூட்தல மாணவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? என்பது பற்றி போலீசார் தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். துணை கமி‌ஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் மாணவர்களை மீண்டும் மீண்டும் நேரில் அழைத்து அறிவுரையும் வழங்கி வருகிறார்கள்.

அப்போது ரூட்தல மாணவர்கள் திருந்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இனி எந்த தவறும் செய்யமாட்டோம். நீங்கள் கூறியதுபோல பெற்றோர்களுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுப்போம். கத்தியை தீட்டாமல் புத்தியை தீட்டி வாழ்க்கையில் முன்னேறிகாட்டுவோம் என்று மீண்டும் போலீஸ் அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளனர். இதன் மூலம் ‘ரூட்தல’ மோகத்தில் இருந்து மாணவர்கள் மீண்டு வருகிறார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து மாணவர்கள் மனம் மாறி நல்வழியில் செல்ல தயாராகி வருகின்றனர் என்றார்.

‘ரூட்தல’யாக தங்களை காட்டிக்கொண்டு கெத்தாக சுற்றி வரும் மாணவர்களில் யாரும் வசதியான வீட்டு பிள்ளைகள் கிடையாது. அனைவரும் மிகவும் ஏழ்மையான கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.

தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களே இதுபோன்று திசை மாறிச் செல்கிறார்கள் என்றும், மாணவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். ‘ரூட்தல’யாக செயல்பட்டு தற்போது வறுமையில் வாடும் முன்னாள் மாணவர்களின் நிலைமையை விளக்கும் வீடியோ ஒன்றையும் போலீசார் தயாரித்துள்ளனர். இதனை மாணவர்களுக்கு போட்டு காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.