பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைதியரத்ன இருவரும் மீண்டும் ஆஜராகின்றனர்.
எதிர்வரும் ஆறாம் திகதி தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன உள்ளிட்ட சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு ஊடாக அறிந்துகொள்ள முடிகின்றது.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அடுத்த மாத இறுதிக்குள் தமது விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவந்து அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம் எடுத்துள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் விசேட தெரிவுக்குழு கூடுகின்றது. இன்றைய தினம் விசாரணைகளுக்காக இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைதியரத்ன ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருவரும் தமது வாக்குமூலங்களை வழங்கியிருந்த நிலையில் இன்று மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் அடுத்த மாதம் 6 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன உள்ளிட்ட சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.