அரச வங்கிகளை தனியார் மயப்படுத்த இடமளியேன் – மைத்திரி

270 0

அரச வங்கிகளை மேலும் பலப்படுத்த வேண்டுமே ஒழிய அவற்றை ஒருபோதும் தனியார் மயப்படுத்தக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன வலியுறுத்தினார்.

அன்று போலவே இன்றும் அதுவே தனது அரசியல் கொள்கையாக காணப்படுகின்றது என சிறிசேன தெரிவித்தார்.

இலங்கை வங்கியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

பரந்துபட்ட விடயப்பரப்பில் பெருமிதத்துடன் பயணித்து மக்களுக்கான நிதிச் சேவைகளை வழங்கி, இந்நாட்டின் முன்னோடி நிதி வழங்குனராக செயற்பட்டு வர்த்தக வங்கி முறைமை, வர்த்தக நிதி நிர்வாகம், அபிவிருத்திக்கான நிதி வசதிகள், அடகு வைத்தல் மற்றும் வேறு நிதி சார்ந்த சேவைகள் பலவற்றை மக்களுக்கு வழங்கிவரும் இலங்கை வங்கி தனது 80ஆவது வருட பூர்த்தியை “நவீனமயப்படுத்தலின் ஊடான முன்னோக்கிய பயணம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடுகின்றது.

விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி நிறுவனங்களிலுள்ள ஊழல்கள், திறமையற்ற முகாமைத்துவம் மற்றும் தொழிற்சங்கங்களின் போக்கு ஆகியவை காரணமாக அரசாங்கத்திற்கு வருமானத்தை தேடித்தரும் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை அனைவரும் அறிந்ததே என தெரிவித்தார்.

அத்தகைய நிறுவனங்களுக்கு தற்போது சக்தியாக விளங்குவது அரச வங்கிகளே என்பதை சுட்டிக் காட்டிய ஜனாதிபதி நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக 80 வருடங்களாக இலங்கை வங்கி நிறைவேற்றிய செயற் பணிகளை ஜனாதிபதி பாராட்டினார்.

இலங்கை வங்கியின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரையொன்றும் முதல் நாள் தபாலுறையும் வெளியிடப்பட்டதுடன், ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அதிதிகளும் இலங்கை வங்கியின் தலைவர் ரொனடில் சீ.பெரேரா, பிரதம நிறைவேற்று அதிகாரி செனரத் பண்டார உள்ளிட்ட ஆளணியினரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.