ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை அந்தக்கட்சியின் செயற்குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
அலரிமாளிகையில் நாளை மாலை நடைபெறவுள்ள இந்த செயற்குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுக்கூட்டணி தொடர்பாகவும் கலந்து ரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் பலரும் வலியுறுத்தியிருந்தனர். இந்த விடயம் தொடர்பில் கட்சியின் செய்குழு மற்றும் பாராளுமன்றக் குழுவினைக் கூட்டி தீர்மானம் எடுக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.
அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவேண்டுமென்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான மலிக் சமரவிக்கிரம, மங்கள சமரவீர, கபீர் காசீம், உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தும் இவர்கள் இந்தக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஆனாலும் பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவான பலபாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாஸவை நியமிக்கும் விடயத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்சியின் உபதலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க பகிரங்கமாகவே சஜித் பிரேமதாஸவின் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.
இதேபோன்றே அமைச்சர்களான சகலரட்னாயக்க, அகிலவிராஜ் காரியவசம், வஜிர அபேவர்த்தன, நவீன் திஸாநாயக்க உட்பட பலரும் சஜிதின் நியமனத்திற்கு எதிராகவே உள்ளனர்.
இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக்கட்சிகள் மத்தியிலும் சஜித் பிரேமதாஸவின் நியமனம் தொடர்பில் முரண்பாடுகள் நிலவிவருகின்றது. ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் ராஜித சேனாரட்ன, ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் பொதுக்கூட்டணி குறித்தும் கூட்டணியின் வேட்பாளர் தொடர்பாகவும் கூட்டுக்கட்சிகளின் தலைவர்களிடையேயும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தலைமையிலான குழுவினருக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினருக்குமிடையில் நேற்று மாலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதேபோன்றே தமிழ் முற்போக்கு கூட்டணியினரை சந்தித்துப் பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பும் சில தினங்களுக்குள் நடைபெறவுள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் கூட்டுக்கட்சிகளுக்கிடையேயும் இன்னமும் இணக்கப்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸ களமிறக்கப்பட்டால் அவருக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்களிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக நியமிக்கப்பட்டால் ஆதரவு வழங்க முடியும் என்றும் இல்லையேல் ஆதரவு வழங்குவது கடினம் என்றும் அறிவித்துள்ளதாகவும் தெரிகின்றது.
அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற அமைச்சர் மங்கள சமரவீரவின் பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இது குறித்து அவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நம்பகரமாக தெரியவருகிறது.
இவ்வாறான சூழலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காகவே ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு நாளை கூடுகின்றது.