கோத்தபாய வேண்டாம்! மஹிந்தவிடம் எடுத்துரைத்த வாசு

385 0

“நாடளாவிய ரீதியில் மக்கள் செல்வாக்குப் பெருமளவில் இல்லாத கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப்  போட்டியிட வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குத் தோல்வியே ஏற்படும். எனவே, ராஜபக்ச குடும்பத்தில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் சாட்டப்படாத சமல் ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்கினால் வெற்றி உறுதியாகும்.”

என இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் தான் நேரில் எடுத்துரைத்துள்ளதாகப் பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பாலும் சஜித் பிரேமதாஸ அல்லது கரு ஜயசூரியவை வேட்பாளராகக் களமிறக்கும் என நான் நம்புகின்றேன்.

இந்தநிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய ஒருவரைத்தான் எமது அணியில் (ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி) வேட்பாளராகக் களமிறக்க வேண்டும்.

கோட்டாபய ராஜபக்சவை சிறுபான்மை இன மக்கள் விரும்பமாட்டார்கள். எனவே, நாடளாவிய ரீதியில் மக்கள் செல்வாக்குப் பெருமளவில் இல்லாத கோட்டாபயவை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப்  போட்டியிட வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குத் தோல்வியே ஏற்படும்.

ராஜபக்ச குடும்பத்தில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் சாட்டப்படாத சமல் ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்கினால் வெற்றி உறுதியாகும்.

இந்த விடயத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நான் நேரில் தெரிவித்துள்ளேன். இந்த நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலில் சமல் ராஜபக்ச வெற்றியீட்டி அவர் தலைமையில் புதிய ஆட்சி அமைகின்றபோது பிரதமர் கதிரையில் மஹிந்த ராஜபக்ச இருக்கவேண்டும். இதையும் மஹிந்தவிடமும் சமலிடமும் நான் நேரில் எடுத்துரைத்துள்ளேன்” – என்றார்.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை மஹிந்த தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த நிலையிலலேயே, மஹிந்தவின் அரசியல் ஆலோசகரான பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் 11ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை மஹிந்த பகிரங்கமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.