ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே ரவூப் ஹக்கீம் அமைச்சு பதவியை பொறுப்பேற்றார் என பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காஷிம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாங்கள் யாரும் கட்சியிலிருந்து பிரிந்துசெல்லவில்லை. சமூகத்தின் பிரச்சினைகளை சாதுரியமாக கையளாக்கூடிய ஒருவர் அமைச்சரவையில் இருக்கவேண்டியது காலத்தின் தேவையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரவூப் ஹக்கீம் அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை திங்கட்கிழமை அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்றது. சுமார் மூன்று மணித்தியாலங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஓர் இணக்கப்பாட்டுடன் கூடிய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் சம்மதமும் பெறப்பட்டது.
கடைசியாக, கல்முனை நிர்வாக அலகு பிரச்சினையை தீர்ப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான நாங்கள், தலைவர் ரவூப் ஹக்கீமிடம் அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கூறினோம். அந்த பின்னணியில்தான் அவர் அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.