செப்டம்பர் மாதம் முதல் இந்திய துணைக்கண்டத்திற்கு தரமுயர்த்தப்பட்ட பாலாலி விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோஷக அபேசிங்க தெரிவித்தார்.
இந்த விமான சேவைகள் மூலம் நாட்டின் உல்லாச பயணத்துறை கட்டியெழுப்பப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டர்.
தரமுயர்த்தப்பட்ட பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 70 பயணிகளை உள்ளடக்கிய விமானங்களை தரையிறக்குவதற்கு பொருத்தமானது.
எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இச்சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்னிந்திய நகரமான சென்னைக்கும் பலாலிக்குமிடையில் விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 110 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பலாலி விமான நிலையம் பிராந்திய வர்த்தக விமானங்களை கையாளும் வகையில் தரமுயர்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இத்திட்டம் பூர்த்தியாக்கப்படும் போது இந்தியா , அவுஸ்ரேலியா , சீனா , ஜப்பான் , மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து பலாலி விமான நிலையத்திற்கு வர்த்தக விமான சேவை ஆரம்பிப்பதற்கு எண்ணியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.