வல்லரசு நாடுகள் தமிழ்மக்களின் அடையாளத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்கின்ற, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமையை அங்கீகரிக்கின்ற தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு வல்லரசு நாடுகள் முதற்கட்டமாக இணங்க வேண்டும். அவ்வாறு இணங்குவது மட்டுமல்லாமல் இந்தத் தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசாங்கத்தை அமுல்படுத்துமாறு கூற முன்னர் அந்த வல்லரசுகள் தமிழ்மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்க வேண்டும். அப்படியானால் தான் தமிழ்மக்களுக்கு வல்லரசு நாடுகள் மீது நம்பிக்கையே வருமெனத் தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை விடுத்து வெறும் ஒப்பந்தங்கள் மாத்திரம் செய்வதால் மாத்திரம் பயன் எதுவும் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கொக்குவிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை(29) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்போன்று இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தியா அல்லது சர்வதேச நாடொன்று மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமாக வந்து எழுத்துமூலமான உறுதிமொழியை வழங்கும் பட்சத்தில் தாம் அவர்கள் கூறும் புதிய ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கத் தயாரெனத் தமிழ்மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உங்கள் கருத்தென்ன? என ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பினார்.
குறித்த கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக இந்தியா கணித்துள்ள புதிய தரப்பு நாங்கள் சொல்லிவரும் விடயங்களுக்கு மேலதிகமாகப் புதிதாக ஒன்றையும் சொல்லவில்லை. ஒப்பந்தம் என்பது இலங்கை அரசுடனோ அல்லது சிங்களக் கட்சிகளுடனோ அல்ல. இவ்வாறான ஒப்பந்தங்கள் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படாதெனக் கடந்த எழுபது வருடகால அனுபவம் சொல்லுகிறது.
தமிழ் அரசியலைத் தங்களுடைய தேவைகளுக்காகப் பயன்படுத்த நினைக்கும் தரப்புக்களுடன் தான் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படல் வேண்டும். ஆனால், அந்த ஒப்பந்தங்கள் என்ன அடிப்படையில் அமைய வேண்டுமென்பதைக் கூறாதது ஏன்? இங்கு தான் பிரச்சினையே காணப்படுகிறது எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.