ஜனாதிபதியின் கருத்து கண்டிக்கத்தக்கது-ஜோசப் ஸ்டாலின்

374 0

joseph-stalin-web-300x200கடந்த வாரம் ஜனாதிபதி ஊழல் மோசடி தொடர்பாகத் தெரிவித்த கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே ஜோசெப் ஸ்ராலின் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜோசெப் ஸ்ராலின்,
கடந்த வாரம் ஜனாதிபதி தெரிவித்த கருத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த அரசாங்கத்தை அதிகாரத்தில் இருத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்களில் முதன்மையானது பிரகீத் எக்நெலிகொட காணாமற்போன விடயம்.

இந்நிலையில் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் 15 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஜனாதிபதி இவ்வாறாகவா கருத்து வெளியிடுவது? எனவே எங்களுக்கு ஒரு விடயம் தெளிவாகிறது.

பிரகீத் எக்நெலிகொட காணாமற்போனமை, லசந்த படுகொலை, ரவிராஜ் அது போல் தெற்கில் நடந்த பல கொலைகள் என பல குற்றச்சாட்டுகள் இராணுவத்தினர் மீதும் குறிப்பாக பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் மீதே குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.

வாய்கால்களை துப்பரவு செய்வது முதல் படுகொலை புரிவது வரை அனைத்திற்கும் புலனாய்வு பிரிவினரை கடந்த அரசாங்கம் பயன்படுத்தியமை தெளிவாக தெரிகிறது. இதற்கு கட்டளையிட்டது கோட்டாபய ராஜபக்சவே. மேலும் எக்நெலிகொட விசாரணை தொடர்பாக, இராணுவத்தினர் போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. இராணு தளபதியைக் கூட கைது செய்யவேண்டி தேவை ஏற்படலாம் என இந்த வழக்கு விசாரணைகளில் நீதிபதி பல தடவைகள் குறிப்பிட்டிருந்தார். ஆகவே ஜனாதிபதி இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.

எனினும் புலனாய்வாளர்கள் சிறையில் இருப்பதற்கு எதிர்ப்பினை வெளியிட்டார். லசந்த கொலை உள்ளிட்ட அனைத்து சம்பவங்களுடனும் புலனாய்வு பிரிவினருக்கு சம்பந்தம் காணப்படுகின்றது. புலனாய்வு பிரிவிற்கு இராணுவத்துடன் சம்பந்தம் இருக்கிறது.

ஆகவே இவர்கள் இராணுவ வீரர்கள் என விசேட நீதியேதும் இல்லை. அவன்கார்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று கடற்படைத் தளபதிகளும் சேவையில இருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் குறித்த நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாலேயே அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஆகவே அவர்களை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என ஜனாதிபதியால் எவ்வாறு கூற முடியும். இது மிகப்பெரிய பிரச்சினை. அவர்களை காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி ஏன் முயற்சிக்கிறார். இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு வழக்குத் தாக்கல் செய்யவில்லை, நீதிபதி திணைக்களம் சரியாக செயற்படவில்லை.

இது தொடர்பில் ஜனாதிபதி கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ரவிராஜ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தில் என்ன குறிப்பிட்டார்கள். கங்காரமை பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து திட்டமிட்டு ரவிராஜை கொலை செய்ததாகவே குறிப்பிட்டிருந்தார்கள்.

15 மாதங்கள் புலனாய்வாளர்கள் சிறையில் இருப்பத ஜனாதிபதிக்கு கவலையளிக்குமானால், 22 வருடங்களாக வழக்கு விசாரணைகளில் இன்றி தமிழ் அரசியல் சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிப்பது கவலையளிக்கவில்லையா? நீதி அனைவருக்கும் சமமானதே  என்று மேலும் தெரிவித்தார்