இஸ்லாமிய அடிப்படைவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற போது ஜனாதிபதி நாட்டில் இருக்கவில்லை. பிரதமர் கொழும்பில் இருக்கவில்லை. தாக்குதல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருந்தும் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடவில்லை. இம்மாதம் 21 ஆம் திகதியுடன் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்த போதும் இது வரையில் தீர்வொன்று வழங்கப்படவில்லை.
இம்மாதம் 24 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் வெலிசறை கடற்படை தளத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை அமெரிக்க பிரதிநிதிகள் சிலர் சந்தித்துள்ளனர். அமெரிக்க புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த இருவரும், இலங்கைக்கான அமெரிக்க தூதுரக அதிகாரியொருவரும், தூதுரகத்தில் பணிபுரியும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். வேறு யாருக்கும் இதில் அனுமதி வழங்கப்படவில்லை என்று அறியக்கிடைத்துள்ளது.
கடற்படையினர் இந்த சந்திப்பிற்கு அனுமதி வழங்க மறுத்த போதும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் கூட அந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. சுமார் 2 மணித்தியாலயம் இந்த சந்திப்பு நீடிதிருந்த போதிலும் இது வரையில் அது தொடர்பான தகவல்கள் யாருக்கும் தெரியாது.
இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது அனைத்து விடயங்களிலும் அமெரிக்காவுக்கு ஏற்றாற் போல இலங்கை முழுமையாக மாறியிருப்பது தெளிவாகிறது. அண்மையில் அமெரிக்காவிலிருந்து பெயர் கூட குறிப்பிடப்படாத விமானமொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. இது தொடர்பிலும் யாரும் கவனம் செலுத்தவில்லை.
இவ்வாறு பொறுப்பற்று செயற்படுவதன் மூலம் பயங்கரவாதம் மிக இலகுவாக இலங்கையில் ஊடுறுவதற்கு அரசாங்கம் தான் வழியமைத்துக் கொடுத்துள்ளது.
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு சவுதி அரேபியாவிலிருந்து கிடைக்கப்பெற்ற நிதி தொடர்பில் மத்திய வங்கிக்கு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனமைக்கும் இந்த அரசாங்கத்தின் முறையற்ற கொள்கைகளே காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடிப்படைவாதத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் மாநாடு நேற்று குருணாகலில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.