சமஸ்கிருதம் செத்துப்போன மொழி என்று பிளஸ்–2 பாடப்புத்தகத்தில் வெளியான செய்தி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை திணிப்பதும், வரலாற்றை திருத்தி பொய்களை புனைந்து டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள இந்துத்துவ சக்திகளின் பிரதிநிதிகளை பேராசிரியர்களாகவும், பல துறைகளின் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டு வரலாற்றை மாற்றியமைத்து மிகப்பெரிய மோசடியை அரசு செய்துகொண்டு இருக்கிறது.
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிப்பதுபோல வடமாநில பல்கலைக்கழகங்களில் செய்த அக்கிரமங்களை தமிழகத்திலும் கொண்டுவர நினைத்துதான் பிளஸ்–2 பாடப்புத்தகத்தில் கிறிஸ்துவுக்கு முன் தமிழ் 300 ஆண்டுகள் என்றும், சமஸ்கிருதம் 3 ஆயிரம் ஆண்டுகள் என்றும் ஒரு பொய்யை திணித்து உள்ளார்கள்.
இதுபோன்ற செய்தி வந்ததும் அதை திருத்தியும், உரியவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்ன அமைச்சர் செங்கோட்டையனை பாராட்டுகிறேன். இதை கொண்டு வந்து திணித்தது யார்?, எழுதியது யார்?, அந்த துரோகி, கயவன் யார்?. சமஸ்கிருதம் செத்துப்போன மொழி என்பதை ஆயிரம் முறை சொல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.