புழல் ஜெயிலில் 12 கைதிகள் உண்ணாவிரதம்

459 0

201610211159499596_12-prisonors-hunger-strike-in-puzhal-jail_secvpfஇந்து முன்னணி பிரமுகர் கொலையில் கைதான குற்றவாளிகள் 12 பேரும் இன்று காலை உணவை சாப்பிட மறுத்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.அம்பத்தூர், மண்ணூர் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இந்து முன்னணி மாவட்ட தலைவராக இருந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு அலுவலகத்தில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அப்பகுதியை சேர்ந்த அபுதாகீர், ஜாபர், சலீம் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று காலை வழக்கு விசாரணைக்காக 12 பேரும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி கோர்ட்டுக்கு மாற்றப்படுவதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 12 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை குற்றவாளிகள் அபுதாகீர், ஜாபர் உள்பட 12 பேரும் காலை உணவை சாப்பிட மறுத்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும் வழக்கை திருவள்ளூர் கோர்ட்டில் இருந்து மாற்றக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அவர்களிடம் சிறைத்துறை சூப்பிரண்டு அன்பழகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினர்.

ஆனால் குற்றவாளிகள் 12 பேரும் சாப்பிட மறுத்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதனால் புழல் ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு குற்றவாளிகள் 12 பேருடன் தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் உள்பட 6 பேரும் அடைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் ஜெய்லர் இளவரசன் உள்பட சிறைக் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தீவிரவாதிகள் 6 பேரும் வேலூர், கடலூர், திருச்சி உள்ளிட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.