அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் மீது அடுக்கடுக்காக செக்ஸ் குற்றச்சாட்டுகள் கிளம்பிவரும் நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது பலவந்தமாக என்னிடம் எல்லைமீறி, தகாத முறையில் நடந்து கொண்டதாக மேலும் ஒருபெண் தற்போது பேட்டியளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் அடிக்கடி அழகி போட்டிகள் மற்றும் மாடலிங் விழாக்களை நடத்தி தனக்கு சொந்தமான சேனல்களில் வெளியிட்டு வந்துள்ளார்.
அவ்வகையில், கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, அழகான பெண்களுடன் உறவுவைத்துக் கொள்வது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஸ்காட்டி நெல் ஹூகேஸ் என்ற அழகியைப்பற்றி தனிப்பட்ட முறையில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் அவர் வெளியிட்ட மிகவும் கீழ்த்தரமான இந்த ஆபாச கருத்தை டிரம்பின் உடையில் அணிந்திருந்த மைக்ரோபோன் வழியாக ஒட்டுகேட்டு, அவரது அதிருப்தியாளர்கள் அப்போது பதிவு செய்து வைத்திருந்தனர்.
ஏற்கனவே, பெண்களைப்பற்றி மிகவும் கீழ்தரமாக விமர்சிக்க கூடியவர் என்ற பட்டப்பெயரை பெற்றுள்ள டிரம்பின் இந்த சர்ச்சைப் பேச்சை உள்ளடக்கிய வீடியோ, அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு தற்போது ‘ஹல்வா’வாக அமைந்துள்ளது.
இதைப்போன்ற பெண்ணியத்துக்கு எதிரானவரையா, இந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க போகிறீர்கள்? என சகட்டுமேனிக்கு டிரம்பை ஹிலாரி போட்டுத்தாக்கி வருகிறார்.
இந்நிலையில், டிரம்ப் மீது இந்த மாதத்தில் மட்டும் ஒன்பது பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் புதியவரவாக கரேனா விர்ஜினியா என்ற 45 வயது பெண் தற்போது இணைந்துள்ளார்.
நியூயார்க் நகரில் பிரபல யோகாசனப் பயிற்சியாளராக இருக்கும் கரேனா, இதுதொடர்பாக, அமெரிக்க ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில், ‘1998-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது தன்னை நெருங்கிவந்து கையை பிடித்து பலவந்தமாக கட்டியணைத்தார். மேலும், அநாகரிகமாகவும், தகாதமுறையிலும் நடந்துகொள்ள முயற்சித்தார்.
அப்போது 27 வயது பெண்ணாக இருந்த நான் அவரை தடுக்க முயன்றபோது, ‘நான் யாரென்று தெரியாதா?, நான் யாரென்று தெரியாதா? என்று கேட்டபடி அவர் அத்துமீற முயன்றார்’ என்று கூறினார்.
அவரது செயலை எதிர்த்துப் போராட நான் சக்தியவற்றவளாக இருந்தேன். உயரமான குதிக்கால் செருப்புடன், குட்டைப் பாவாடை அணிந்திருந்ததை எண்ணி அவமானப்பட்டேன். அந்த அவமானம் என்னை வெகுநாட்கள்வரை ஆட்கொண்டிருந்தது’ என்றும் கண்ணீருடன் அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய குற்றச்சாட்டை டொனால்ட் டிரம்ப்பின் பிரசாரத்துறையின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜெசிக்கா டிட்டோ மறுத்துள்ளார். ஹிலாரி கிளிண்டனின் தூண்டுதலின்படி, பல பெண்கள் இப்படி வெட்கத்தைவிட்டு பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவது வாடிக்கையாகி விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.