தமிழர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் மாற்று சமூகத்துக்கு அடிமையாக நேரிடும் – கோடீஸ்வரன்

308 0

தமிழர்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால் மாற்று சமூகத்துக்கு அடிமையாக நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர்கள் பிரிந்திருந்து பல்வேறு மாற்றுக் கட்சிகளுக்கு செல்லும்போது, பேரினவாதிகள் தமிழரது கலாசாரத்துக்குள்ளும் சமூகத்துக்குள்ளும் உள்நுழையக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காரைதீவு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் தமிழோடும் தமிழ் தேசியத்தோடும் ஐக்கியப்பட்டு ஒற்றுமையாக வாழவேண்டிய அவசியம் இருக்கின்றது. அந்தவகையில்  தமிழர்கள் எப்போதும் ஒன்றாக இருக்கும்போதே வலிமை இருக்கும்.

ஆனால், தமிழர்கள் பிரிந்திருந்து பல்வேறு மாற்றுக் கட்சிகளுக்கு செல்லும்போது தமிழர்களின் பலம் இழக்கப்படுவதோடு, மாற்று சக்திகள் எங்கள் கலாசாரத்துக்குள்ளும், சமூகத்துக்குள்ளும் உள்நுழையக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.  இதனால் கலாசார சீர்கேடுகள் ஏற்படும்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் உரிமை சார்ந்த பிரச்சினைகள் அதிகம் இருக்கின்றன. இப்பகுதிகளில் நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் அதிகம் இடம்பெறுகின்றன. அவற்றைத் தடுக்க வேண்டிய கடமைப்பாடு இருக்கிறது.  எங்களுடைய மதம், கலாசாரம் சார்ந்த விடயங்களில் ஏனையவர்கள் உள்நுழையும் நிலையை தடுத்து நிறுத்தவேண்டும்.

இன்று தமிழ் மக்கள் வாழ்கின்ற பல பிரதேசங்களில் பெரும்பான்மையின மக்கள் இல்லாத அல்லது பௌத்த மதம் இல்லாத இடங்களில் புதிதாக விகாரைகள் அமைக்கப்படுகின்றன.

தமிழர்களின் உரிமை சார்ந்த பிரச்சினை அரசியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தமிழர்களே குரல் கொடுத்து வருகிறார்கள். ஏனைய பேரினவாத சக்திகள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்ததாக சரித்திரமில்லை.

மேலும் பேரினவாதக் கட்சிகளின் கரத்தை தமிழர்கள் பலபடுத்துவார்களாயின் பலதரப்பட்ட சிக்கல்களை தமிழ் சமூகம் எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டி ஏற்படும். இந்த விடயங்களை கருத்திற் கொண்டு தமிழர்கள் ஒன்றாக பயணிக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.