உயர்நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை கோத்தாவின் வழக்கு ஒத்திவைப்பு

334 0

வீரகெட்டிய – மெதமுல்லன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு தூபி ஸ்தாபிக்கப்பட்டதன் ஊடாக மூன்று கோடிக்கும் அதிகமான தொகை அரச நிதி  வீண்விரயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான சாட்சி விசாரணைகள் உயர் நீதிமன்றத்தின்  தீர்பு கிடைக்கப் பெறும் வரை முன்னெடுக்காமலிருக்க மூவரடங்கிய விஷேட நீதாய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன் போது விளக்கமளித்த பிரதி சொலிசிட்டர் ஜனரால் திலீப் பிரீஸ் குறிப்பிடுகையில்,

இந்த வழக்கின் சாட்சி விசாரணையை ஒக்டோபர் முதலாம் திகதி வரை இடை நிறுத்தி மேல் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிரப்பித்துள்ளது என தெளிவுபடுத்தியதையடுத்தே சாட்சிகள் மீதான விசாரணைகள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் முன்னெடுக்க விஷேட நீதாய மன்றம் தீர்மானித்து தீர்ப்பளித்தது.

விஷேட நீதாய நீதிமன்ற நீதியரசர்களான சம்பத் விஜயரத்ன, சம்பத் அபேகோன் மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையிலேயே இந்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 3 ஆம் திகதி , 2015 பெப்ரவரி 2 ஆம் திகதி ஆகிய காலப்பகுதிக்குள் குறித்த டீ.ஏ.ராபக்ஷ நினைவு தூபி ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வழக்கின் பிரதிவாதிகளுக்கு சட்ட மா அதிபர் குற்றம் முன்வைத்திருந்தார்.

இதன் பிரகாரம் தண்டனை சட்டக் கோவை மற்றும் பொது சொத்துக்கள் பயன்பாடு குற்றங்களின் பிரகாரமும் பிரதிவாதிகள் குற்றம் இழைத்துள்ளதாக சட்ட மா அதிபர் நீதிமன்றில் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் காணப்படுகின்ற ஒரு விடயதானத்தில் திருத்தத்தை மேற்கொள்ள சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் அறிவித்தனர். இதன் பிரகாரம் எதிர்ப்புக்கள் காணப்படுமாயின் அதனை ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்குமாறும் அன்றைய தினத்துக்கு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க மூவரடங்கிய நீதியரசர் குழாம் தீர்மானித்தது.